இன்று பதிலளிக்கிறார் பிரதமர் மோடி : இரவு ஓட்டெடுப்பு நடைபெறுகிறது..!
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலளிக்கிறார். இன்றே ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.;
மணிப்பூரில் நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் மானபங்கப்படுத்தப்பட்டனர். மணிப்பூரில் இரண்டு பெண்களை ஊர்வலமாக அழைத்து சென்று கொடுமை செய்த வீடியோ வெளியாக பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. உலக அளவில் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவத்தை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் நீதிகேட்டுள்ளன. மணிப்பூருக்கும் எதிர்க்கட்சிகளின் குழு சென்று பார்வையிட்டு விட்டு வந்தது. இந்த பிரச்னை முடிவுக்கு வரும் முன்பே ஹரியானாவில் கலவரம் தொடங்கி உள்ளது. மணிப்பூரிலும் அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் எட்டாம் தேதி தொடங்கியது. நேற்று முழுக்க நடைபெற்றது. இன்றும் நடைபெற உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விவாதத்தின் இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார்.
இதில் மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, அவர்கள் எழுப்பிய பல்வேறு புகார்கள் குறித்து பதிலளிக்க உள்ளார். பிரதமர் மோடி சில மணி நேரங்கள் வரை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் பேசி முடித்ததும், இன்று இரவே அரசு மீது ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகள் கடும் புகார் எழுப்பி, வலுவாக ஒன்று சேர்ந்துள்ளதால், ஓட்டெடுப்பு முடியும் வரை பரபரப்பு நிலவும் என்பதில் சந்தேகமில்லை.