பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100வது வயதில் இன்று காலமானார்.

Update: 2022-12-30 01:27 GMT

பிரதமர் மோடியுடன் அவரது தாயார்.

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது 100வது வயதில் காலமானார்.

கடந்த 28ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை நிர்வாகமும் அவ்வப்போது சிகிச்சை குறித்த அறிக்கையையும் வெளியிட்டு வந்தது. 

இந்த நிலையில் பிரதமர் மோடியும் நேற்று (29ம் தேதி) மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். விரைவில் குணமடைவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். 

அவரது மறைவு குறித்து தெரிவித்துள்ள பிரதமர், இன்று அதிகாலை இதயப்பூர்வமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு வாழ்க்கை கடவுளின் காலடியில் தஞ்சமடைந்துள்ளது. ஒரு துறவியின் பயணமும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளமும், மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய, அந்த மும்மூர்த்திகளையும் நான் எப்போதும் அவருள் உணர்ந்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தனது தாயாரின் 100வது பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்ததை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

"அவரது 100வது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார், இது எப்போதும் நினைவில் இருக்கிறது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க, அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு உலகத்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News