குஜராத் கட்ச் பகுதியில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடியது ஏன்?

தீபாவளி நாளில் பாகிஸ்தானையும் அதன் ஆதரவு நாடுகளையும் அலற விட்டது பாரதம்.

Update: 2024-11-03 05:19 GMT

பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். அப்போது இராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

பிரதமர் மோடி அவர் வாழ்நாளில் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் பெரும்பாலும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தலைப்பு செய்தியாகி வருகிறது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் அவர் எந்த படைப்பிரிவோடு எந்த மண்டலத்தில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்? என்பதும் அரசியல் ரீதியாகவும் கேந்திர அரசியல் ரீதியாகவும் கவனிக்கப்படும் விஷயமாக மாறி வருகிறது.

அவ்வகையில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதி மாநிலமான காஷ்மீரில் அவர் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்பதும் அதன் பிறகு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு தற்போது அங்கு படிப்படியாக அமைதி திரும்புவதும் கவனிக்கத்தக்கது.

அசாம் அருணாச்சல் பிரதேசம் உள்ள பகுதிகளிலும் அவர் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றதும் தற்போது இந்திய சீன எல்லை பிரச்சினையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமான பனிக்காலத்திற்குப்  பின் நகர்வு என்ற போர்வையில் சீனா லடாக் கல்வான் எல்லையில் இருந்து பின்வாங்கி இருப்பதும் சமீபத்திய நிகழ்வுகள்.

மோடியின் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்ட வரலாறு இப்படி இருக்க, இந்த தீபாவளி பண்டிகையை அவர் குஜராத் மாநிலத்தின் கட்ச்  பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடியிருக்கிறார். குஜராத்தில் கட்ச் பகுதியில் கப்பற்படை ரோந்து படகில் பயணித்து அங்குள்ள வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

குஜராத் கட்ச் பகுதியில் இருந்து கூப்பிடும் தொலைவில் தான் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் இருக்கிறது. அரபிக் கடலுக்கு அந்தப் பக்கம் ஏமன் ஓமன் உள்ளிட்ட அரபு நாடுகள். அரபிக் கடலில் வாரம் ஒரு முறை பெரும் அளவில் போதைப் பொருட்கள் பிடிபட்டுக் கொண்டிருந்தது . கடந்த மாதம் வரை வாராந்திர செய்தியாக இருந்தது.

இப்படியான நிலையில் குஜராத்தின் கட்ச் பகுதியில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார் . சமீப காலமாக கட்ச்  பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் பிடிபட்டது என்ற தகவல் வருவது அரிதாகி அங்கு முழுவதும் பாதுகாப்பு ரோந்து கண்காணிப்பு கட்டுப்பாட்டில் முழுமையாக பாரதத்திடம் இருப்பதையும் கூர்ந்து கவனித்தால் ஒவ்வொரு ஆண்டும் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடும் கொண்டாட்ட சூட்சமம் உங்களுக்கு புரியும்.

இது வெறும் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் சாதாரண நிகழ்வு மட்டுமல்ல. வழக்கமான பாதுகாப்பு ஒத்திகையில் இருக்கும் ராணுவ படகில் பிரயாணம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதையும் கடந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் ஒரு வலுவான எச்சரிக்கையை மோடி கொடுத்திருக்கிறார்.

போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக இருந்த இலட்சத்தீவு பகுதியை இன்று ஒரு கடற்படை தளமாக மாற்றி கட்டமைத்திருக்கிறார். மறுபுறம் கடல் எல்லையில் சர்வதேச பகுதியிலேயே போதைப் பொருளை கைமாற்றும் மையமாக இருக்கும் கட்ச் பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில் அங்கு பாதுகாப்பு கண்காணிப்பு ரோந்து பணியை தீவிரப்படுத்தி அந்த பகுதி முழுவதையும் இந்திய கப்பற்படையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

சமீபத்தில் திவாலாகும் நிலைக்கு படிப்படியாக நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் பாகிஸ்தான் தனது நிலப்பரப்பில் ஒரு பத்தாயிரம் ஏக்கர் நிலப்பகுதியை சவுதி அரேபியாவிற்கு விற்பதற்கு முடிவு செய்திருப்பதும் அதற்கு உண்டான வரைவு பணிகள் நடைபெற்று  வருவதையும் செய்திகளாக சர்வதேச ஊடகங்களில் பார்த்து வருகிறோம்.

இது போன்ற ஒரு சூழலில் ஒரு புறம் பாகிஸ்தானும் இன்னொரு புறம் அரபு நாடுகளும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் குஜராத்தின் கட்ச் பகுதியில் கப்பற்படையுடன் ரோந்து படகில் சென்று பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி விட்டு மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது ஒன்றும் சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை.

இதன் மூலம் அவர் பாகிஸ்தானிற்கும் அதன் ஆதரவு நாடுகளுக்கும் ஒரு வலுவான செய்தியை கொடுக்கிறார். 2014க்கு முன்பு இருந்தது போல் இந்தியாவின் நிலைமை இப்போது இல்லை. இங்குள்ள பாதுகாப்பு படைகள் எல்லாம் அதி நவீன தொழில்நுட்பம் ஆயுதங்கள் தளவாடங்கள் என்று பெரும் வலிமையோடு நிற்கிறது. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் உளவு படைகள் சர்வ சுதந்திரமாக செயல்பட முடிகிறது.

தற்போதைய பாரதத்தின் பிரதமர் பொறுப்பில் இருப்பவர் வெடிச்சத்தம் கேட்டால் மயங்கிவிழும் கோழை அல்ல. மாறாக போர் விமானம் முதல் கப்பற்படையின் ரோந்து படகு வரை நேரடியாக பயணித்து வீரர்களுடன் கலந்து பயணித்து அவர்களை உற்சாகப்படுத்தி பண்டிகை கொண்டாட்டத்தை கூட வீரர்களோடும் முன்னெடுக்கும் ராணுவ வீரர்களை தன் தேசத்தின் காவலர்களை தன் சொந்த குடும்ப போல  நேசிக்கும் ஒரு பிரதமர் இருக்கிறார். அதனால் இனியும் பாரதத்தை சீண்டிப் பார்க்கும் எண்ணம் வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தனது அன்றாட செலவுகளுக்கும் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் தனது தேசத்தின் ஒரு நிலப்பகுதியை விற்பதற்கு தயாராகும் பாகிஸ்தானை பார்த்து ‘நீ விற்க நினைக்கும் நிலப்பகுதியும் உனக்கு சொந்தமானது இல்லை. அதனால் நீ விற்பதும் அதை வேறு ஒருவர் வாங்குவதும் சாத்தியம் இல்லை’ என்று எச்சரிக்கிறார்.

மறுபுறம் பாகிஸ்தானின் நிலப்பகுதியை வாங்கத்  தயாராகும் சவூதிக்கும் பாகிஸ்தான் விற்க தயாராகும் நிலப்பகுதியும் அவர்களுக்கு நிரந்தரமான உரிமையானது இல்லை. நீங்கள் அதை வாங்குவதும் சாத்தியம் இல்லை. வாங்கினாலும் அது உங்களுடையது என்று உரிமை கொண்டாடும் வாய்ப்பு இல்லை. எனவே பாகிஸ்தானின் இந்த நில விற்பனை நப்பாசையை நம்பி ஏமாறாதீர்கள் என்று சூசகமாக சொல்கிறார்.

ஒருவேளை நீங்கள் இன்று பாகிஸ்தானின் நிலப்பரப்பை விலை கொடுத்து வாங்கினாலும் அந்த விற்பனையும் ஒப்பந்தமும் உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமே சட்டபூர்வமான ஒப்பந்தமாக இருக்க முடியும். மாறாக பாரதத்தை பொருத்தவரையில் அது ஒரு செல்லாத வெற்றுத் தாளாகத்தான் கருத முடியும். நேற்று காஷ்மீர் மாநிலத்தின் நில உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று என்ன கதியாக இருக்கிறார்களோ? அதே கதி தான் நாளை சவூதிக்கும் வரக்கூடும் என்பதை ராஜதந்திர மொழியில் சொல்லி இருக்கிறார்.

காரணம் சிறப்பு அந்தஸ்தை காரணம் காட்டி காஷ்மீரில் இந்து சீக்கியர்களின் நிலத்தை அபகரித்தவர்கள் எல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களின் பலரும் சொர்க்கம் போயிருக்கலாம். ஆனால் விரட்டியடிக்கப்பட்ட பண்டிட்கள் சீக்கியர்கள் எல்லாம் இன்று பாதுகாப்பாக அங்கு மீண்டும் குடியேறத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் நிலங்கள் எஞ்சி இருக்கும் சொத்துக்களை அவர்கள் வசப்படுத்த தொடங்கி விட்டார்கள்.

இதோ இன்று பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு இருக்கும் காஷ்மீர் பாரதத்தோடு இணைவதற்கான ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருகிறது. நாளை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாரதத்தோடு இணையும் போது அங்கிருக்கும் எந்த ஒரு சட்ட விரோத ஆக்கிரமிப்பும் முடிவுக்கு வந்துவிடும். அப்படி இருக்க மூன்றாக நான்காக சிதற தயாராக இருக்கும் பாகிஸ்தானில் ஒரு நிலப்பரப்பை அங்கு இருக்கும் ஒரு பொம்மை அரசிடம் இருந்து சவுதி வாங்குவதும் அந்த நிலப்பரப்பிற்கு சொந்தம் கொண்டாடி சவுதி பாகிஸ்தானில் கால் பதிப்பதும் பாரதத்தின் இறையாண்மைக்கு ஒவ்வாத செயல் என்பதை பாரதம் அறியும். இதை அறிந்து தான் வேண்டுமென்றே பாகிஸ்தான் அதை செய்ய துணிகிறது. சவூதியும் தெரிந்தோ தெரியாமலோ அதில் விழ தயாராக இருக்கிறது என்பதை பாரதம் நன்கு அறியும்.

அதனால்தான் பாரதத்தின் பண்பாடு கலாச்சாரங்களை மதித்து தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை முதல் மகாபாரதம் ராமாயணம் பகவத் கீதை உள்ளிட்ட பாரதத்தின் பொக்கிஷங்களை சவுதியில் மாணவர்களுக்கு பள்ளி பாடங்களில் போதிக்கும் அளவிற்கு பாரதத்தோடு பண்பாடு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நெருங்கிய நட்பு பாராட்டும் சவுதி போன்ற ஒரு நாடு பாகிஸ்தானின் சதி வலையில் விழக்கூடாது என்று ஒரு எச்சரிக்கையை மோடி கொடுத்திருக்கிறார். சவுதி மன்னரின் குடும்ப பாதுகாப்பு வரை வலுவான நிலையில் செல்வாக்கில் இருக்கும் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறை எப்படியோ ஒரு பசப்பு நாடகத்தை அரங்கேற்றி சவுதியிடம் செலவுக்கு பணம் இல்லை. கொஞ்சம் நிலப்பரப்பை வாங்கிக் கொண்டு பணம் கொடுங்கள் என்ற ரீதியில் சவூதியைக் கொண்டு வந்து தங்களுக்கு பாதுகாப்பாக பாகிஸ்தானில் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற திட்டமிட்டு சதி வலையை விரித்து இருக்கிறது.

தற்போது சவுதியின் முன் இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று யாருக்காகவும் எதற்காகவும் பாரதத்தை பகைத்துக் கொள்ளக் கூடாது. மோடி போன்று ஒரு உலகத் தலைவரை விரோதிக்க கூடாது என்று பாகிஸ்தானை கைகழுவி விட்டு அமைதியாக ஒதுங்கிப் போவது.

இல்லையேல் பாகிஸ்தானின் வலையில் முழுமையாக விழுந்து பாகிஸ்தானின் நிலப்பரப்பை வாங்கி நேரடியாக பாரதத்தை எதிர்க்க தயாராவது. அதன் பிறகு மலேசியா, துருக்கி, ஈரான், மாலத்தீவு, சீனா, கனடா வரிசையில் சவுதியையும் நிற்க வைத்து பாரதத்திடம் பகையை சம்பாதிப்பது. மறுபுறம் உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் தலை குனிந்து நிற்பது என்ற இரண்டு வழிகள் தான். இரண்டில் சவுதி எதை தேர்ந்தெடுக்கிறது என்பது அவர்களின் விதி.

அவர்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் ஒரு புறம் மோடியின் அதிரடி மறுபுறம், ஜெய்சங்கர் ஆஜிதோவல் இருவரின் வியூகங்கள் என்று எதையுமே சமாளிக்க முடியாத நிலையில் முழுவதுமாக மல்லாந்து கிடக்கிறது பாகிஸ்தான். ஆனாலும் திருந்திய பாடில்லை. அவர்களை ஆதரித்த பாவத்திற்கு இன்று பாரதத்திடம் உரிமையாக எதையும் பேச முடியாமல் மௌனித்து கிடக்கிறது அரபு நாடுகள்.

அனைத்தையும் படிப்படியாக துல்லியமாக ராஜ்ஜிய நடவடிக்கைகள் மூலம் செய்து முடித்த மோடியின் அரசாங்கம் மர்மமான பகுதி என்று சர்வதேச கடல் படைகள் குறிப்பிடும் கட்ச் பகுதியில் பட்டப் பகலில் கப்பற்படை ரோந்து படகில் பாரதத்தின் பாதுகாப்பு வீரர்களோடு தீபாவளியை கொண்டாடி அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பரிமாறி நாங்களாக யார் வம்புக்கும் போக மாட்டோம். வந்தால் விடுவதற்கு இல்லை என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Tags:    

Similar News