சினிமா நடிகர்களுக்கு பவன்கல்யாண் எச்சரிக்கை
சினிமா நடிகர்கள் கவனத்துடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் எச்சரித்துள்ளார்.;
'இந்து சனாதன தர்மத்தைக் காக்க வேண்டும்' என்று ஆவேசத்துடன் பேசி சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக வெளியான ஆய்வின் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'திருமலை திருப்பதி தேவஸ்தானம்' திருப்பதி கோயிலுக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து வருகிறது. மத்திய அரசு இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச அரசியல் களத்தில் இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில் இந்த திருப்பதி லட்டு விவகாரத்தைக் கையில் எடுத்து முழு வீச்சுடன் இறங்கி அதிரடியாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண். இதுகுறித்து, "இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்ற பிரச்னைகளை ஆராயத் தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' என்ற அமைப்பை நிறுவ வேண்டும்" என்று பேசியிருந்தார். இதுதவிர லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதால் ஏற்பட்ட கலங்கத்தைப் பரிசுத்தம் செய்யப் பூஜைகள் செய்வது, அதிரடியானக் கருத்துகளைத் தெரிவிப்பது எனப் பரபரபாகவே இருந்து வருகிறார் பவன் கல்யாண்.
திருப்பதி லட்டு விவகாரத்தை வைத்து பவன் கல்யாண் கடுமை காட்டி வருவதை ஒட்டுமொத்த பக்தர்களும் வரவேற்று உள்ளனர். அவ்வகையில் தொடர்ந்து அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், "அன்புள்ள பவன் கல்யாண், இந்தச் சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. நீங்கள்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தைப் பரப்புகிறீர்கள். இந்தப் பிரச்னையை தேசிய அளவில் ஊதிப் பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் பற்றி பேசுவதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார் பவன் கல்யாண். அப்போது நடிகர் பிரகாஷ் ராஜின் கருத்திற்குப் பதிலளித்திருந்த பவன் கல்யாண், "பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மட்டுமல்ல எல்லா நடிகர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். மதச் சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் அவமதிக்காதீர்கள். இந்து சனாதன தர்மத்தைப் பற்றிப் பேசுகையில் ஒன்றுக்கு, நூறு முறை யோசித்துப் பேசுங்கள்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.
பவன் கல்யாணுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், "பவன் கல்யாண், இப்போது தான் நீங்கள் என்னைப் பற்றிப் பேசிய செய்தியாளர் சந்திப்பைப் பார்த்தேன். நான் சொன்ன கருத்தைப் புரிந்து கொள்ளாமல், நீங்கள் ஏதேதோ பேசுகிறீர்கள். நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அங்கிருந்து திரும்பி வந்தவுடன் நீங்கள் பேசியதற்குப் பதிலளிக்கிறேன். முதலில் நான் சொன்ன கருத்தைப் புரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்" என்று காணொலி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
இதுமட்டுமின்றி நடிகர் கார்த்தி, 'மெய்யழகன்' தெலுங்கு புரோமோஷன் விழாவில் லட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இந்த நேரத்தில் லட்டு பற்றிப் பேச வேண்டாம். இது சென்ஸிட்டீவான விஷயம்" என்று பதிலளித்திருந்தார். இதைத் தவறாகப் புரிந்த கொண்ட பவன் கல்யாண், "திருப்பதி லட்டு விவகாரத்தை காமெடி ஆக்க வேண்டாம். ஒரு நடிகராக உங்களை நான் மதிக்கிறேன். அதேசமயம் நடிகர்கள் இந்து சனாதன தர்மத்தை மதிக்க வேண்டும்" என்று ஆவேசத்துடத்துடன் பேசியிருந்தார். இப்படியாகப் பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறார் பவன் கல்யாண்.