ஏமாந்த பாலிவூட் இசையமைப்பாளர் : மெசேஜ் வந்தால் உஷார் மக்களே..!
பாலிவுட் இசையமைப்பாளர் ஒருவர், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தியை நம்பி லிங்கை க்ளிக் செய்து பணத்தை பறிகொடுத்து ஏமாந்தார்.
பாலிவுட் இசையமைப்பாளர் ஒருவர் தனது பான் கார்டைப் புதுப்பிக்காததற்காக தனது வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தியை நம்பி ரூ.20,000 மோசடி செய்யப்பட்டார்.
கணக்கு செயலிழக்கப்படுவதைத் தவிர்க்க, குறுஞ்செய்தியாக அவருக்கு அனுப்பப்பட்ட இணைப்பைக் 'கிளிக்' செய்து, அவரது வங்கி விவரங்களை மோசடி பேர்வழிகள் பெற்றனர். இதனால் மோசடி நபர்களுக்கு அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்க வாய்ப்பானது.
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மூலம் பலமுறை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டாலும், இதுபோன்ற மோசடி குறுஞ் செய்திகளால் மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு, சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகின்றனர் என்று போலீசார் வருத்தம் தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் வழக்கில், மோசடி செய்ததாக போவாய் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மே 1ம் தேதி மாலை இசையமைப்பாளர் வீட்டில் இருந்தபோது இந்த மோசடி நடந்துள்ளது. அவருக்கு வந்த குறுஞ்செய்தியின் இணைப்பைக் 'கிளிக்' செய்தார். அவர் ஒரு முறை கடவுச்சொல்லை(OTP) உள்ளிட்ட பிறகு பணம் எடுக்கப்பட்டுவிட்டது.
காவல்நிலையத்தில் உள்ள சைபர் டீம், எந்தக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது என்ற விவரங்களைப் பெற வங்கியில் கேட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் என்பதால், இணைப்பை உருவாக்கியவரைக் கண்டுபிடிப்பதற்காக, இணைப்பின் இணைய நெறிமுறை முகவரியின் விவரங்களை போலீஸ் குழு சேகரித்து வருகிறது என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
அவரது கணக்கில் மேலும் ஏதேனும் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, இந்த மோசடி பரிவர்த்தனை குறித்து இசையமைப்பாளர் வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இசையமைப்பாளர் போலீசில் அளித்த புகாரில், தனது கணக்கு முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தியைப் படித்து கவலையடைந்ததால், தனக்கு அனுப்பப்பட்ட வெப்லிங்கை 'கிளிக்' செய்ததாக கூறியுள்ளார்.
அவர் தனது பான் கார்டு விவரங்களை பதிவேற்றும் ஒரு பக்கத்திற்கு அந்த இணைப்பு அவரை அழைத்துச் சென்றதாகவும், 'சேமி' விருப்பத்தை அழுத்திய பிறகு, அவருக்கு OTP கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். "ரூ.20000 டெபிட் செய்யப்பட்டபோதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்," என்று அவர் புகாரில் கூறியுள்ளார்.
கடந்த 16 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 1,552 ஏடிஎம் மோசடி வழக்குகளில் 52 வழக்குகளுக்கு மட்டுமே மும்பை காவல்துறை தீர்வு காண முடிந்தது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களே உஷாரா இருங்க..! உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை முழுதாக நம்பிவிடாதீர்கள். உங்களுக்கும் ஏமாற்றம் வரலாம்.உஷார்.