கேரள அரசின் கிடுக்குப்பிடி : சாத்தியமாகுமா தெரியல?
வாகன ஓட்டிகளின் கவனச்சிதறலை தடுப்பதற்காக புதிய சட்ட விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.;
இன்று சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை டூ வீலர் ரேசிங் தான்.அதுவும் சமூக வலைதளங்களில் லைக் வாங்க வாகன ஓட்டிகள் செய்யும் விதிமீறல்கள் அத்தனை பேரையும் வருத்தப்பட வைக்கிறது. தவிர டூ வீலரில் இருவர் பயணிக்கும் போது, பேசிக்கொண்டே பயணிக்கின்றனர். இதனால் ஏற்படும் கவனச்சிதறல்கள் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த கேரள அரசு கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, இனி இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், பின்னால் அமர்ந்திருப்பவருடன் பேசினால், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இது எந்த வகையான விதிமீறலில் வரும் என்பது குறித்த விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்கும் நிலையில், நீண்ட தூர பயணங்களின் போது, இருவரும் பேசிக்கொள்ளாமல் பயணிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.