ராணுவத்தில் சேர புதிய நடைமுறை: மார்ச் 15 வரை விண்ணப்பிக்க அழைப்பு
ராணுவத்திற்கான ஆட்கள் சேர்ப்பிற்கு, முதலில் பொது நுழைவுத் தேர்வும், அதன்பின் உடல் தகுதி தேர்வும் நடத்தும் வகையிலான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராணுவ பணியில் சேர, மார்ச், 15க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குனர், எம்.கே.பாத்ரே அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராணுவ ஆள்சேர்ப்பில் தற்போது, முதலில் உடற்தகுதித் தேர்வும், பின் எழுத்துத் தேர்வும் நடக்கிறது. இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, முதலில் 'ஆன்லைன்' வாயிலாக பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். இதில் வெற்றி பெறுவோர், உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதன்பின் இறுதித் தேர்வு நடைபெறும். இந்த ஆன்லைன் தேர்வு, ஏப்ரல் 17 முதல் 30ம் தேதி வரை, நாடு முழுவதும், 176 இடங்களில் நடக்கிறது.
ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில், மார்ச், 15க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகள், மாதிரி வினாத்தாள்கள் போன்றவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய். இதில், 250 ரூபாயை ராணுவம் பங்களிப்பாக வழங்கும். தேர்வு எழுதுவோர், 250 ரூபாய் செலுத்தினால் போதும். ஒரு விண்ணப்பதாரர் தேர்வு எழுத, ஐந்து மையங்களை தேர்வு செய்யலாம். அதில், ஒரு மையம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் விபரங்களை, 79961 57222 என்ற மொபைல் போன் எண்ணிலும், jiahelpdesk2023@gmail.com மற்றும் joinindian army@gov.in ஆகிய இ - மெயில் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.