67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் விற்கப்படும் 67 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Drugs Standard Control Organisation) அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு மருந்து தவறான வா்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்துள்ளது.
அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் வலி, காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.