கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு...! கடும் அழுத்தத்தில் மம்தா பானர்ஜி!
கொல்கத்தாவில் நடந்த மருத்துவர் கொலை வழக்கு மம்தா பானர்ஜியை இதுவரை இல்லாத நெருக்கடியில் தள்ளி உள்ளது.;
“ஆர்.ஜி.கார் மருத்துவமனை சம்பவத்தில் குற்றவாளிகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் தூக்கிலிட வேண்டும். வங்கதேசம் போல் இங்கும் எனது ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கிறது. எனக்கு அதிகார பேராசை இல்லை. இந்த சம்பவத்தில் சிபிஎம், பிஜேபி அரசியல் செய்கின்றன. ஆர்.ஜி.கார் மருத்துவமனை மீதான தாக்குதலின் பின்னணியில் இடதுசாரிகளும் சில கட்சிகளும் உள்ளனர்..’’ என பதறிக்கொண்டுள்ளார் மம்தா.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் மம்தா பானர்ஜி இந்த அறிக்கைகளை அளித்துள்ளார்.
பொதுவாக, இதற்கு முன் எந்த ஒரு விஷயத்திலும் அவர் இதுபோன்ற அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு இருந்ததில்லை. இந்த சம்பவத்தால் மம்தா கடும் அழுத்தத்தில் உள்ளாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அவரது மிகப்பெரிய வாக்கு வங்கி உடைந்து போகும் அபாயத்தை அவர் நேரடியாக கண்டுள்ளார். அவர் தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் முறையாக இவ்வளவு கடினமான சவாலை எதிர்கொள்கிறார்?
இந்த விவகாரம் சி.பி.ஐ., வசம் சென்றாலும், சுப்ரீம் கோர்ட்டும் இதுவரை இல்லாத அளவு கோபத்தை வெளிப்படுத்தியது மம்தாபானர்ஜியை கடும் நெருக்கடிக்குள் தள்ளி உள்ளது. மம்தாவின் நாடகத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களும் நிராகரித்து விட்டனர் என்பது அவருக்கும் தெளிவாக புரிந்து போனது. சம்பவம் நடந்ததும், குற்றவாளிகளை தப்ப விட்டதும், தடயங்களை அழிக்க முயற்சித்ததும், போலீஸ் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதும் மிகவும் தவறு. இந்த விஷயத்தில் மிகவும் கவனக்குறைவாக செயல்பட்ட கல்கத்தா போலீஸ் டி.ஜி.பி.,யை மாற்ற வேண்டும் என வெளுத்து வாங்கி உள்ளது சுப்ரீம்கோர்ட். சுப்ரீம் கோர்ட்டின் நெருக்கடி இன்னும் சில நாட்களில் கொலை செய்யப்பட்ட டாக்டர் குடும்பத்திற்கு நீதியை பெற்றுத்தரும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.