முன்னாள் அமைச்சருடன் அன்பை பகிர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி..!

கேரளாவில் பணிபுரியும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பகிர்ந்த முன்னாள் அமைச்சருடனான `அன்பின் இனிமை’ படம் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Update: 2024-06-25 05:03 GMT

கேரளா முன்னாள் அமைச்சர்  கே.ராதாகிருஷ்ணன் கலெக்டர் திவ்யா எஸ் அய்யரின் இல்லத்துக்கு சென்றிருந்தபோது  எடுத்துக்கொண்ட படம்.

‘அன்பிற்கு எல்லையில்லை, அன்பினை கூட்டுக்குள் அடைக்க முடியாது. ஒரு கட்டுக்குள் கொண்டு வர முடியாது‘ என்ற வார்த்தைகளுக்கு உதாரணமான ஒரு சம்பவம் கேரளாவை கலக்கி எடுத்து வருகிறது.

``கேரளாவில் அமைச்சராக இருந்த கே.ராதாகிருஷ்ணன் அரசு நிகழ்ச்சிக்காக பத்தனம்திட்டா சென்றிருந்தார். அப்போது அங்கு கலெக்டராக இருந்த திவ்யா எஸ் அய்யரின் இல்லத்துக்கு சென்றிருந்தார். அப்போது தான், ‘அன்பின் இனிமை’ என்ற வாக்கியத்திற்கான போட்டோ கிடைத்தது’’

கேரள மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத்துறை, தேவசம்போர்டு உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக இருந்தவர் கே.ராதாகிருஷ்ணன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கே.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஒரே சி.பி.எம் எம்.பி இவர் மட்டும் தான்.


இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடருவதற்காக தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார் கே.ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் கேரள மாநில துறைமுகத்துறை இயக்குநரான பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி திவ்யா எஸ் அய்யர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனுடன் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை பகிர்ந்தார்.

அதில், "கனிவான விரல்களால் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு குடும்பம். ராதா அண்ணா, ராதாகிருஷ்ணா, பெரியப்பா, சார்... என்பது போன்ற பல அன்பான அழைப்புக்களால் நிறைந்திருந்த அமைச்சரின் அரசு இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவரின் குடும்பம். நான் பத்தனம்திட்டா கலெக்டராக இருந்து ரிலீவ் ஆனபோது அவரின் அன்பின் இனிமையை எனக்கு உணர்த்தியது" என இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

திவ்யா எஸ் அய்யர் பகிர்ந்த போட்டோ ஒன்றில் முன்னாள் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனை திவ்யா எஸ்.அய்யர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொள்வது போன்ற ஒரு போட்டோவும் இடம் பெற்றிருந்தது. அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து திவ்யா எஸ் அய்யரின் கணவரும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சபரிநாதன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "கே.ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் திவ்யா அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தார். அதன் பின்னர் அமைச்சருடனான நினைவு குறித்து இன்ஸ்டாகிராமில் இரண்டு பழைய போட்டோக்களை பதிவிட்டார். அதில் ஒரு போட்டோ வைரலாகியுள்ளது.

அமைச்சராக இருந்த சமயத்தில் கே.ராதாகிருஷ்ணன் அரசு நிகழ்ச்சிக்காக பத்தனம்திட்டா சென்றிருந்தார். அப்போது அங்கு கலெக்டராக இருந்த திவ்யா எஸ் அய்யரின் இல்லத்துக்கு சென்றிருந்த போது எடுத்த போட்டோ அது. கே.ராதாகிருஷ்ணன் அதன் பின்னர் சிறிது நேரம் எங்கள் வீட்டில் இருந்து விட்டு, இரவு உணவுக்குப்பின் புறப்பட்டுச் சென்றார். மிகவும் மதிப்பிற்குரிய, அன்பான ஒரு நபரை மற்றொருவர் கட்டிப்பிடிக்கும் போட்டோவை பாசிட்டிவாக மக்கள் எடுத்துக்கொள்வது மிகவும் மகிழ்ச்சியானது.

அதே சமயம் நெகட்டிவ் கமெண்டுகளும், பொருத்தமற்ற கருத்துக்களும் எழாமல் இருந்தால் போதும்" என குறிப்பிட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போன்றே கேரள மக்கள் இதனை ஒரு பாசிட்டிவ்வான மகிழ்வான நிகழ்வாகவே, அன்பின் பறிமாற்றமாகவே எடுத்துக் கொண்டனர். யாரும் தவறாகவும் நினைக்கவில்லை. இதனால் இதுவரை நெகட்டிவ் கருத்துக்கள் எழவில்லை. அப்படி நெகட்டிவ்வாக சொல்வதற்கும் வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News