கர்நாடக தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கபட்டதே
பாஜக ஒன்றும் பெரும் வீழ்ச்சி அடையவில்லை, அதன் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கின்றது;
தோல்விகளற்ற வெற்றி என்பது எந்த கட்சிக்கும் சாத்தியமில்லை, ஜனநாயகத்தில் அது தவிர்க்க முடியாதது. இங்கு சில அடிப்படை விஷயங்கள் கவனிக்கதக்கவை. பொதுவாக தென் மாகாணங்களில் ஒருமுறை ஆண்ட கட்சி மறுமுறை வருவது மிக மிக கடினம். காமராஜர், எம்ஜிஆர், என்டி ராமராவ், ஜெயலலிதா போன்ற வெகுசிலரே அந்த சாதனையினை நிகழ்த்தினார்கள்.
மற்றபடி ஒருமுறை ஆண்டவர்களுக்கு மறுமுறை இங்கே வாய்ப்பே இல்லை, அப்படி பலமுறை மாற்றப்பட்ட அனுபவம் தமிழகத்தில் தி.மு.க.,விற்கே உண்டு. பாஜகவின் வீழ்ச்சி என இதனை சொல்ல முடியாது. காரணம் உபி, குஜராத் போன்ற மாபெரும் அடிதளம் அதாவது கட்சி உள்கட்டமைப்பு இங்கே அக்கட்சிக்கு இல்லை. முன்பே தடுமாறிய பா.ஜ.க., லிங்காயத் சமூகத்தை வளைத்துத்தான் ஆட்சிக்கு வந்தது.
அந்த ஆட்சியில் பல ஊழல்கள் சிக்கல்கள் எழுந்தன. குஜராத் போல உபியின் யோகி போல ஒரு சிறந்த ஆளுமை அங்கே அமையவில்லை. தொட்ட இடமெல்லாம் ஊழல் அதிகம். இதனை பாஜக உணர்ந்து தான் முதல்வரை மாற்றியது. எஸ்.ஆர் பொம்மையினை வைத்த பொழுதே லிங்காயத்துகள் ஆத்திரம் கொண்டனர். லிங்காயத்துக்கு இல்லா பதவி யாருக்குமில்லை என பழிதீர்த்தனர் இதுதான் நிஜம். ஆக வடக்கே உள்ள வியூகம் இங்கே ஊழலும் சுயநலமும் கொண்ட மாகாணத்தில் எடுபடாது என்பதை மெல்ல புரிந்து கொண்டது. பாஜக இனி வியூகத்தை மாற்ற வேண்டும்
பாஜக ஒன்றும் பெரும் வீழ்ச்சி அடையவில்லை, அதன் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கின்றது, 50 தொகுதிகளில் வெறும் இரண்டாயிரம் மூவாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் வீழ்ந்திருக்கின்றார்கள். ஆக கட்சி வலுவான இடத்தில் தான் இருக்கின்றது எனினும் சில அதிருப்திகள் இருந்தது நிஜம். முதல் சிக்கல் அந்த சி.டி ரவி. அவர் களத்துக்கு லாயக்கற்றவர் என்பதை தமிழக தேர்தல்களிலே கண்டோம். அவருக்கு கட்சி வியூகமோ தகுந்த வேட்பாளர் தேர்வோ, கள நிலவரமோ தெரியவில்லை.
மாபெரும் குழப்பவாதி பெரும் திறமை இல்லாதவர். அப்படிபட்டவரை முன்னால் நிறுத்தியதே முதல் தவறு. பாஜக செய்த இரண்டாம் தவறு தங்கள் ஆட்சியின் ஊழல்வாதிகளை தண்டித்தால் கட்சியின் நற்பெயர் கெடும் என அஞ்சியது அல்லது தயங்கியது. ஊழல் விவகாரம் வந்த கொஞ்ச நாளிலே பெரும் நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களிடம் நற்பெயர் பெற்றிருக்கலாம் அதை செய்யவில்லை. உண்மையில் பாஜகவின் மேலிடம் சரியாக இருக்கின்றது. ஆனால் அடிமட்டம் மோசம், அது மோடி அமித்ஷா போன்ற பெயர்களால் வெற்றி பெறலாம். இந்த வெற்றியால் தனக்கென்ன லாபம் என்றே கணக்கிட்டதே தவிர கட்சி வளர்க்கவில்லை.
இதனால் ஒரு அஜாக்கிரதையாக இருந்தார்கள். இனி தங்களை அசைக்கமுடியாது என ஒரு கர்வத்தில் இருந்தார்கள். இதனால் தேர்தல் பணியினை தாமதமாக தொடங்கினார்கள், மோடி எனும் மனிதனின் அடையாளம் தங்களுக்கு வெற்றி தேடிதரும் என மிதப்பில் இருந்தார்கள். மக்கள் அதிருப்தியானால் காங்கிரஸ் பக்கம் சரிவார்கள் என கொஞ்சமும் கருதவில்லை.
ஆனால் காங்கிரஸ் அப்படி அல்ல. இரு ஆண்டுக்கு முன்பே களத்துக்கு வந்தார்கள் கார்கே தலைவரானார். ஓசைபடாமல் களத்தில் வேலை செய்தார்கள். பாஜக அதை செய்யவில்லை கடைசி வெறும் 3 மாதம் முட்டி மோதியது. பலனளிக்கவில்லை. உண்மையில் பாஜக குழம்பியது. தேர்தல் நெருங்க நெருங்க திணறினார்கள். அவர்கள் முன்பு செய்த ஒரு காரியம் எதிரணியில் இருந்து பலரை வளைத்தார்கள். ஆனால் அந்த நரிகள் தேர்தல் நெருங்க நெருங்க நெருக்கடி கொடுத்து சரியான நேரத்தில் கைவிட்டு ஓடின. இதுவும் ஒரு காரணம். வேட்பாளரை அறிவிக்க முடியாமல் பாஜக திணறிய போது அதனால் நெருக்கடிகளும் வெளியேறுதல்களும் நடந்த போதே இவர்கள் திணறுகின்றார்கள் என்பது தெரிந்தது அஞ்சியது நடந்தது.
காங்கிரஸ் அப்படி அல்ல, இரு வருடமாகவே வேட்பாளர் யார்? தேர்வு என்ன என சரியாக அடையாளம் கண்டார்கள். இப்படி பல காரணங்கள் இருந்தாலும் தோல்வியின் முழு பொறுப்பு கர்நாடக பாஜகவினரைத்தான் சாரும். அங்கு மக்கள் சரியாக இருக்கின்றார்கள். இந்து மக்கள் எழுச்சியாகத் தான் இருக்கின்றார்கள். பாஜகவினை வரவேற்கின்றார்கள் ஆனால் அதனை சரியாக அறுவடை செய்யதெரியாமல் தோற்றுவிட்டது பாஜக. மோடி எனும் மாமனிதனின் பெயர் வெற்றி பெற்றுதரும் அது தங்கள் பலவீனத்தை சோம்பேறிதனத்தை மறைய வைக்கும் என அவர்கள் இட்ட கணக்கு தவறிவிட்டது.
இன்னொரு முக்கிய விஷயம் இஸ்லாமியர், கிறிஸ்தவர் வோட்டு சரியாக மொத்தமாக காங்கிரசுக்கு சென்றது, இந்துக்கள் வோட்டு பிரிந்து சிதறியது, இதுதான் மகா முக்கிய காரணம். இந்த தோல்வி நல்லது. இனி நாடு முழுக்க பாஜக அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஒவ்வொரு பாஜகவினரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் , இனிகவனமாக இருப்பார்கள் அது மிக நல்லது. அந்த எச்சரிககையினை இத்தேர்தல் கொடுத்திருக்கின்றது. நிச்சயம் இந்த தேர்தல் முடிவுகள் அகில இந்திய தேர்தலில் அடுத்த வருடம் எதிரொலிக்காது. மாகாண தேர்தல் வேறு பாராளுமன்ற தேர்தல் தன்மைவேறு எனும் வகையில் பாஜகவின் பிரதமர் தேர்வை இது பாதிக்காது. மாற்றங்கள் கர்நாடாக பாஜகவில் அவசியம்.
தமிழக பாஜகவும் இப்படி ஒரு குருட்டு நம்பிக்கையில் தான் இருக்கின்றது. மோடி, அண்ணாமலை என்பது மட்டும் வெற்றி தராது. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். களத்தில் வேலை செய்ய தமிழக பா.ஜ.க.,வில் சுத்தமாக ஆள் இல்லை. தமிழகத்தில் திமுக அதிமுக அதனை ஒசைபடாமல் தொடங்கி விட்டன பாஜக இன்னும் களத்துக்கே வரவில்லை. கர்நாடகத்தில் இருந்து பாடம் படித்து கொண்டால் நல்லது. காங்கிரஸும் ஐந்து வருடம் நிமம்தியாக ஆட்சி நடத்தமுடியுமா என்றால் இல்லை, அரசியலுக்காக பேசுவதை எல்லாம் ஆட்சியில் செய்ய முடியாது. அவர்கள் அறிவித்த பெரும் இலவசங்களும் இதர சிக்கல்களும், மேகதாது விவகாரமும் இன்னும் மதம் சார்ந்த நிலைப்பாடும் அவர்களுக்கு இடியாக அமையும். மேலே பாஜக இருக்கும் நேரம் நிச்சயம் பல நெருக்கடிகள் வரும்.
கோஷ்டி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸின் இனி அணி அணியாக மோதுவார்கள், நிச்சயம் மோதுவார்கள். ஊழலுக்கு பெயர்போன அக்கட்சி இனி பாஜகவினரின் ஊழல்களை விட பெரும் ஊழலை சில மாதங்களிலே தொடங்கி விடும். எளிதில் மக்களின் அதிருப்தியில் சிக்கும். ஆக தற்காலிக வெற்றியினை காங்கிரஸ் பெற்றிருக்கின்றது. இந்த வெற்றியால் திமுகவினர் துள்ளிகுதிக்க ஒன்றுமில்லை, அப்படி குதித்தால் அரசியல் ஞானம் இல்லை என்பது பொருள். காரணம் இனி காங்கிரஸ் தமிழகத்தில் 10 தொகுதிகள் கேட்கும். திமுக திணறும். அகில இந்திய அளவில் அகிலேஷோ, நிதிஷ் குமாரோ, மம்தாவோ இல்லை அகாலிதளமோ யாரும் காங்கிரஸ் வெற்றியினை விரும்பவில்லை. சரத்பவாரும் விரும்பவில்லை. இங்கே இப்படி திமுகவினர் கொண்டாடினால் பாராளுமன்ற தேர்தலில் தனித்து விடப்படுவார்கள். அது பெரும் சிக்கல். ஒரு தேசாபிமானியாக இங்கே கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விஷயம் அந்த தேவகவுடா கட்சி கூப்புக்கு போனது. அது நல்லது. மாகாணம் தேசிய பாதைக்கு திரும்பியிருக்கின்றது தேவகவுடாவின் வாக்குகளை பாஜகவும் காங்கிரசும் அறுவடை செய்திருக்கின்றன. இது நல்லது.
காங்கிரஸ் தமிழகத்தில் உபியில், குஜராத்தில், பஞ்சாபில் அழிந்திருக்கலாம். ஆனால் பல இடங்களில் அது பலமாகத்தான் உள்ளது. காரணம் அங்கெல்லாம் அய்யா ராமசாமி, கருணாநிதி, யோகி, மோடி போன்றோர் வரவில்லை , காங்கிரஸை ஒழிப்போம் என அய்யா ராமசாமி தான் அகில இந்திய அளவில் முதலில் அழைப்பு விடுத்தவர். அதை அண்ணா, கருணாநிதி ஆகியோர் செயலில் காட்டினர். அதுவும் திமுக ஒன்றுபட்டு இருந்தால் காங்கிரஸ் எதிர்கட்சியாகும் நாளை ஆளும் கட்சியாகும் என கருதி தன் கட்சியினையே இரண்டாக உடைத்து காங்கிரஸ் எழாமல் பார்த்து கொண்டவர் கருணாநிதி. இப்படிபட்ட அரசியல் இல்லா இடங்களில் காங்கிரஸ் வலுவாகத்தான் இருக்கும், கலைஞர் வரிசையில் மம்தா, சரத்பவார் என பலர் வராத இடங்களிலெல்லாம் காங்கிரஸ் வலுவாகவே இன்றும் உண்டு. அது உண்மை அதை மறுக்க முடியாது.
பாஜகவின் தோல்வி ஒன்றும் புதிதல்ல உபியில் இப்படி ஆடி தோற்ற கட்சிதான் இன்று அசுர பலமாக ஆட்சியில் இருக்கின்றது. அவர்களுக்கு இதெல்லாம் பழகி போன ஒன்று. ஆனால் வடக்கே சரியான நபர்களை அமர்த்தி போராடி ஆட்சிக்கு வந்தார்கள், தெற்கே அதை அவர்கள் இனி செய்யவேண்டும், கட்சியின் அடிதளத்தை சரியான தலைவர்களை கொண்டு நிரப்பி செய்ய வேண்டும். இனி அதனை முயற்சிப்பார்கள். அண்ணாமலையினை பொறுத்தவரை இது அவருக்கு பயிற்சி, தேர்தல் என்றால் என்ன? எப்படியெல்லாம் சிக்கல் வரும். அதிர்ச்சி வரும், எங்கே விழுந்தது குழப்பம்? எங்கே தவறினோம்? எதை சரி செய்ய வேண்டும் என அவர் பாடம் படிக்க வேண்டிய இடம் இது.
இது அண்ணாமலைக்கு தோல்வியா என்றால் இல்லை. 1957ல் திமுக தன் முதல் தேர்தலில் நின்றபொழுது அண்ணா, நெடுஞ்செழியன் என எல்லோரும் தோற்றனர், கருணாநிதி உள்பட 10 பேருக்குள் தான் வென்றனர். அண்ணா நிலைமையே தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது, அப்படியான அரசியலில் அண்ணாமலைக்கு இதெல்லாம் சாதாரணம் கடந்து வரட்டும், பலம் பெற்று வரட்டும். தோல்வியற்ற வெற்றி என்பது எங்கும் சாத்தியமில்லை, அதுவும் மிக பெரும் அடிதளமில்லா கன்னடத்தில் சாத்தியமில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பாஜக உழைக்கவேண்டிய நேரமும் ஆழமும் அதிகம் என்பதை தேர்தல் சொல்லியிருக்கின்றது. மற்றபடி மிக விரைவிலோ இல்லை அடுத்த முறையோ பாஜகவிடம் ஆட்சி நிச்சயம் வரும், பா.ஜ.க, அதை நிச்சயம் சாதிக்கும்.