மேல்முறையீட்டில் தப்புவாரா தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜா?
கேரள மாநிலம் தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜாவின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் செல்லபடியாகுமா...?
தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான ராஜாவின் தேர்வை, கடந்த திங்கட்கிழமை அன்று ரத்து செய்து உத்தரவிட்டது கேரள மாநில உயர்நீதிமன்றம். பட்டியலினத்திற்காக ஒதுக்கப்பட்ட தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில், மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ராஜா, வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து களத்தில் நின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தது கேரள மாநில உயர் நீதிமன்றம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ராஜா மதம் மாறியதாலேயே, அவரது வெற்றி செல்லாததாக ஆகியிருக்கும் இந்த நிலையில், இதற்கு முன்னால் இது போன்ற நடைமுறைகள் கேரளாவில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள மாவேலிக்கரா மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் மீதும், இதே போல மதம் சார்ந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அவரது தேர்வை செல்லாதது என்று அறிவித்தது கேரள மாநில உயர்நீதிமன்றம்.
சுரேஷ் பட்டியலினத்திற்காக ஒதுக்கப்பட்ட மாவேலிக்கரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டது செல்லாது என்று அறிவித்த கேரள மாநில உயர்நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய கொடிக்குன்னில் சுரேஷ், தான் 1989 முதல் மக்களவை உறுப்பினராக இருந்து வருவதாகவும், தன்னை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஆர் எஸ் அனிலின், காழ்ப்புணர்ச்சியே இந்த வழக்கின் முகாந்திரம் என்றும் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை கவனமாக விசாரித்த உச்சநீதிமன்றம், சுரேஷின் கடந்த கால வெற்றிகள் அவரை சமூகம் தங்களில் ஒருவராக கருதியது என்றும், சுரேஷ் கிறித்தவ மதத்தில் பிறந்து வளர்ந்தவர் என்கிற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதோடு, அவர் தனது 16வது வயதில் இந்து மதத்திற்கு மாறிவிட்டார் என்கிற சான்றுகளின் அடிப்படையிலான மேற்கோளையும் காட்டி, கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் தேர்தல் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, மக்களவை உறுப்பினராக கொடிக்குன்னில் சுரேஷ் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பு ராஜாவுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. கொடிக்குன்னில் சுரேஷ் மீது வழக்கு தொடரப்பட்ட காலத்திற்கு முன்பாக மூன்று முறை அவர் மக்களவை உறுப்பினராக அடூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றை உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டியது போல, ராஜாவுக்கு எதுவும் இல்லை என்பது துரதிஷ்டம்.
ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கிறிஸ்தவ சபை ஒன்றில் ராஜா உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கும் சான்று, தேவாலயத்தில் நடைபெற்ற அவரது திருமணம், அவரது பெற்றோர் பாரம்பரியமாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் ஆவணங்கள், நாளது தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் செல்லும் தேவாலயம் உள்பட அத்தனை ஆவணங்களையும் முழுமையாக கொடுத்துள்ளார். இதனால் ராஜா மீது உச்ச நீதிமன்றம் கருணை காட்ட எவ்வித வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
கொடுமை என்னவென்றால் கடந்த 1957ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், இரட்டை உறுப்பினர் முறை அமலில் இருந்தது. இதே தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ரோசம்மாள் புன்னூஸ், கேரள மாநில சட்டமன்றத்தின் இடைக்கால சபாநாயகர் ஆகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் தான் அவரை எதிர்த்து களத்தில் நின்ற பி கே நாயர், கேரள மாநில உயர் நீதிமன்றத்தை நாடி,ரோசம்மா புன்னூஸ் தன்னுடைய வேட்பு மனுவை சட்டவிரோதமாக நிராகரிக்க கூறியதாக வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கேரள மாநில உயர்நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்ததோடு,ரோசம்மா வெற்றி செல்லாது என்றும் அறிவித்தது. இரும்பு மனம் படைத்த ஈ எம் எஸ் நம்பூதிரி பாட், நீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக 1958 ஆம் ஆண்டு நடந்த தேவிகுளம் இடைத்தேர்தலிலும் ரோசம்மாவையே தன்னுடைய கட்சியின் சார்பாக வேட்பாளராக அறிவித்தார்.
மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் ரோசம்மாவை தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே பெற்ற வாக்குகளை போல மூன்று மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறச் செய்தார்கள். ராஜாவுக்கு அந்த வாய்ப்பும் இல்லை என்றே தோன்றுகிறது.
உச்சநீதிமன்றத்தை அணுக இருக்கிறார் தேவிகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. அதற்கான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது கேரள மாநில உயர் நீதிமன்றம். இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் மாஸ்டரும், கேரள மாநில முதல்வரும் இது குறித்து வாயே திறக்காதது ஜனநாயகத்தின் மீதான அவர்களுடைய அவநம்பிக்கையை காட்டுகிறது.