பெயரை பார்த்து ஏமாந்த முதலீட்டாளர்கள்: சின்னப்பிள்ளைத்தனமா இருக்கே ?
மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.;
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் ஆக்ஸிஜன் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்தால் வருமானம் கொட்டும் என்று முதலீட்டாளர்கள் நினைத்தனர். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக ஆக்சிஜன் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக நினைத்து முதலீட்டாளர்கள் ஏமாந்த கதை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைக்காட்டிலும் கொரோனாவின் 2வது அலை படுமோசமாக இருப்பதால், இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் கடந்து பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத்தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன், ஐசியூ படுக்கைகள் போன்ற மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பிடும்படியாக சமீப நாட்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் பாதக சூழலை முதலீட்டாளர்கள் சாதகமாக மாற்றத் துடித்தனர். இதனால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களில் முதலீட்டை குவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. இவ்வாறு முதலீட்டாளர்களின் முதலீடு செய்ததால் நேஷனல் ஆக்சிஜன், லிண்டே இந்தியா,பகவதி ஆக்சிஜன் மற்றும் பிற நிறுவனங்களின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி காண்டோ சிலிண்டர்ஸ் போன்ற சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் அதிகரித்து வருவதை காண முடிகிறது.
இதனிடையே, ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனம் என கருதி பாம்பே ஆக்சிஜன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரித்ததால், அந்நிறுவன பங்கின் விலை தாறுமாறாக அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 133 சதவீதம் அதிகரித்து விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வந்தது. ஆனால், உண்மையில் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபடவில்லை.
அந்நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும். ஆக்சிஜன் என்ற பெயரில் இருப்பதால், அது ஆக்ஸிஜன் உற்பத்தியுடன் தொடர்புடைய நிறுவனம் என தவறாக முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். இதனை உணர்ந்த பின்னர் அந்நிறுவனத்தில் இருந்து முதலீட்டை நீக்கி வருகின்றனர். இதனையடுத்து இந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வருகிறது.
என்னப்பா இது சின்னப்பிள்ளைத்தனமா நடந்துக்கிட்டோமே என்று முதலீட்டாளர்களே தலையில் அடித்துக்கொள்கிறார்களாம்.