சர்வதேச விமானங்கள் ரத்து: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஐக்கிய அரபு நாடுகள்

இந்தியா, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய பயணிகள் வருவதற்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.

Update: 2021-04-25 04:29 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், சென்னை உள்ளிட்ட இந்தியாவிலிருந்து துபாய்,சார்ஜா,அபுதாபி செல்லும் அனைத்து சா்வதேச விமானங்களும் இன்று அதிகாலையிலிருந்து 10 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அலை வேகமாக பரவி வருவதோடு, தற்போது அதிக பாதிப்பிற்குள்ளான உலக நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து இந்திய பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன.

இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி நாடுகள் இன்று அதிகாலையிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.

இதையடுத்து சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், ஃபிளை துபாய் விமானங்களும், அதைப்போல் சார்ஜா செல்லும் ஏா்இந்தியா, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏா்லைன்ஸ் விமானங்களுமாக மொத்தம் 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அந்ததந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளை சோ்ந்தவா்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அதோடு ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியா்கள், அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியா்கள், டிப்லோமெடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவா்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதே நேரத்தில் அவா்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறப்பு விமானங்களில் பயணிப்பவா்கள், பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து நெகடீவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதோடு ஐக்கிய அரபு நாடுகளில் சென்று இறங்கியதும், அவா்கள் செலவில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த 14 நாட்களில் 4 வது மற்றும் 8 வது நாளில் பயணிக்கு ஐக்கிய அரபு நாட்டின் சுகாதாரத்துறையினா் 2 முறை கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்துவார்கள். அதில் நெகடீவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவா்களை நாட்டிற்குள் அனுமதிப்பார்கள். பாசிடீவ் ரிசல்ட் யாருக்காவது வந்தால், அவா்களை வெளியே விடாமல் உடனடியாக கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையில் சோ்த்துவிடுவார்கள். இதைப்போன்று கடுமையான கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு நாடுகள் விதித்துள்ளது.

அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் இந்த சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பி வருவதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அவா்கள் வழக்கம்போல் சிறப்பு விமானங்களில் சென்னை உள்ளிட்ட இந்தியாவிற்கு வரும் விமானங்களில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளை தொடா்ந்து வளைகுடா நாடுகளான கத்தார், ஓமன், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கான சிறப்பு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இதையடுத்து இன்று சென்னைக்கு மஸ்கட்டிலிருந்து வரவேண்டிய ஓமன் ஏா்லைன்ஸ், தோகாவிலிருந்து வரவேண்டிய கத்தார் ஏா்லைன்ஸ், குவைத்திலிருந்து வரவேண்டிய குவைத் ஏா்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்பட்டுள்ளன. அதோடு இங்கையிலிருந்து சென்னை வரவேண்டிய 2 ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானங்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் இன்று ஞாயிறு அன்று கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் சென்னை உட்பட இந்தியாவிற்கு சரக்குவிமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News