'கல்வி'யாய்யா முக்கியம்? திருமணத்துக்கு செலவை அள்ளிக்கொட்டும் இந்தியர்கள்..!

இந்தியாவில் திருமண நிகழ்ச்சிக்கு தரும் முக்கியத்துவமும், செய்யப்படும் செலவுகளும் ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.;

Update: 2024-07-03 06:13 GMT

இந்திய திருமணங்கள் (கோப்பு படம்)

கடந்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஒரு சிறப்பு விமான நிலையமே உருவாக்கினார்கள். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தினை அலங்கரிப்பது, தங்க, வெள்ளித்தட்டுகளில் விருந்து பறிமாறுவது, நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேருக்கும் பல லட்சம் செலவில் உடைகள் வாங்கி கொடுத்து வரவேற்றது என அங்கு நடந்த நிகழ்வுகளும், அதற்காக செய்யப்பட்ட செலவுகளும் உலகின் கவனத்தை ஈர்த்து விட்டன.

இப்போது அம்பானி மகனின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் ஒன்றின் விலையே கிட்டத்தட்ட லட்சம் ரூபாயினை எட்டும் போல் தெரிகிறது. இந்த அழைப்பிதழ் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் எம்.பி., ஜெகத்ரட்சகனின் உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்தத்திற்கு அச்சிடப்பட்ட அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அழைப்பிதழ் அவ்வளவு செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அதேபோல் கேரளாவில் நடைபெறும் பல பணக்கார வீட்டு திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்களும் உலகம் முழுவதும் வைரலாகின்றன. டிக்டாக், சாட் செயலிகளில் பகிரப்படும் இந்திய திருமண விருந்துகளும், அதில் பறிமாறப்படும் உணவுகளும், அதற்காக செய்யப்படும் செலவுகளும் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்தியாவில் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து நமது பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, நாகரீகம் குறித்து ஒட்டுமொத்த உலகமும் தேடித்தேடி படிக்கத்  தொடங்கி உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் கல்விக்காக செய்யப்படும் செலவுகளை விட திருமணத்திற்காக செய்யப்படும் செலவுகள் பல மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது. இந்த உண்மை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தெரியும்.

காரணம் இந்தியாவில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக படிக்கும் வசதியும் உள்ளது. மிக குறைந்த செலவில் படிக்கும் வசதியும் உள்ளது. செலவு செய்து படிக்கும் வசதியும் உள்ளது. எப்படியிருந்தாலும் கல்விக்கான செலவு என்பது திருமண செலவுகளை விட மிக, மிக குறைவு தான் என்பது மறுப்பதற்கில்லை.

திருமண செலவுகள் வரன் பார்க்க தொடங்கும் போதே தொடங்கி விடுகிறது. வரன் பார்க்க செல்பவர்கள் காரில் தான் செல்வார்கள். மணப்பெண், மணமகள் இவர்கள் தான் என உறுதிப்படுத்தும் நிகழ்வே விருந்துடன் தான் தொடங்கும். இந்த விருந்தே தடபுடலாக இருக்கும். அடுத்து திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி. முடிந்த அளவு அத்தனை பேரும் திருமண அழைப்பிதழை மிகவும் நல்ல முறையில் வடிவமைக்கவே விரும்புகின்றனர்.

காரில் சென்று அழைப்பிதழ் கொடுப்பது என்பது ஒரு நடைமுறையாகவே உருவாகி விட்டது. இதெல்லாம் சிறிய செலவுகள் தான். அடுத்து திருமண நகைகள் எடுத்தல், திருமண உடைகள் எடுத்தல், திருமண நி்ச்சயதார்த்தம், அதில் மணமகன், மணமகள் அழைப்பு, நிச்சயதார்த்த விருந்து, திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்தல், திருமண மேடை வடிவமைத்தல், திருமணம் நடத்துதல், காலை, மாலை திருமண விருந்து, மறுநாள் மறுவீட்டு விருந்து (இது முழுக்க நான் வெஜ் தான்) என ஒரு திருமணத்திற்கு தொடர்ந்து மூன்று நாள் விருந்து நிகழ்ச்சிகள் களை கட்டும்.

அடுத்து சீர்வரிசை வழங்கல் என ஒரு பெரும் நிகழ்ச்சியும் நடக்கும். இந்த நிகழ்ச்சியில் மிக, மிக நெருங்கிய உணவினர்கள் மட்டும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு விருந்துக்கும் பல லட்சம் செலவாகும். திருமண சாப்பாடு செலவே ஒரு பெரிய தொகையில் வந்து நிற்கும். திருமண மண்டபங்களின் வாடகை பற்றி கேட்டாலே தலைசுற்றி விடும். அந்த அளவு வாடகை வசூலிக்கும் மண்டபங்கள் உள்ளன.


ஒரு நடுத்தர குடும்பத்தில் நடைபெறும் திருமண செலவுகளே கிட்டத்தட்ட 50 லட்சம் முதல் 2 கோடி வரை ஆகி விடுகிறது. பணக்கார வீட்டு திருமணம் என்றால், செலவு கோடிகளில் மூன்று இலக்கத்தினை எட்டும். சமீபத்தில் மதுரையில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் உலகின் கவனத்தையே ஈர்த்தது எல்லோருக்கும் தெரியுமே. இப்போது நடைபெறும் ஜெகத்ரட்சகன் வீட்டு திருமண நிகழ்ச்சியும் மூர்த்தி வீட்டு திருமண நிகழ்ச்சியை விட பல மடங்கு பிரமாண்டமாகத்தான் இருக்கும். அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியின் செலவு கோடிகளில் ஐந்து இலக்கத்தினை தாண்டும். 

இந்நிலையில் ஏழைகள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு தான் உள்ளன. சில ஆயிரங்கள் செலவு முதல் சில லட்சங்கள் செலவுக்கும் நிறைவடையும் திருமண நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்ப்பது என்னவோ நடுத்தர மற்றும் பணக்கார வீட்டு திருமணங்கள் தான். இந்த நிகழ்ச்சிகள் முழுவதும் நமது பண்பாடு, கலாசாரத்தின் அடிப்படையில் நடைபெறுவதால், இந்தியர்கள் திருமண செலவுகளை கௌரவமாக பார்க்கின்றனர்.

அமெரிக்கர்கள் திருமண செலவுகளையும், கல்வி செலவுகளையும் ஒப்பிட்டுப்  பார்த்து மலைத்துப்போய் நிற்கின்றனர். அதனால் தான் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் கல்வி செலவுகளை விட பல மடங்கு திருமணத்திற்கு செலவிடப்படுகிறது என முடிவுகள் வெளியாகி உள்ளன. இது முழுக்க, முழுக்க உண்மை தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

Tags:    

Similar News