இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.17 லட்சம் கோடி இழப்பு
வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள் கிழமை இந்திய பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.;
வணிக நேர முடிவில் சென்செக்ஸ் 3 சதவீதம் வரையிலும், நிஃப்டி 2.6 சதவீதம் வரையிலும் சரிந்தது. இதனால் ஏராளமான நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ. 17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட பதற்றத்தால் பங்குச்சந்தை உலக அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி, ஆசியாவில் சியோல் (தென்கொரியா), டோக்கியோ (ஜப்பான்), ஷாங்காய் (சீனா), ஹாங்காங் பங்குச்சந்தை வணிகமும் கடும் சரிவை சந்தித்தன.
ஜப்பானின் நிக்கேயி பங்குகள் 4,451.28 புள்ளிகள் சரிந்தது. இது மொத்த வணிகத்தில் 12% ஆகும். இது கடந்த வெள்ளிக்கிழமை 8.5% ஆக சரிந்திருந்தது. கடந்த இரு வணிக நாள்களில் மட்டும் 18.2% சரிவை சந்தித்துள்ளது ஜப்பான்.
இந்தியாவில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தர நிறுவனங்களில் 2 நிறுவனங்கள் மட்டுமே ஏற்றத்துடன் இருந்தன. எஞ்சிய 28 நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.