பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகில் 5-ல் 1 பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.;

Update: 2024-09-11 04:03 GMT

கோப்புப்படம்

உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டின் ஐந்தில் ஒரு பங்கிற்கு இந்தியா பங்களிக்கிறது என்று கடந்த வாரம் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான ஜோசுவா டபிள்யூ காட்டம், எட் குக் மற்றும் கோஸ்டாஸ் ஏ வெலிஸ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 251 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன, இது சுமார் 200,000 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது. இந்த கழிவுகளில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 52.1 மில்லியன் டன் கழிவுகள் நிர்வகிக்கப்படாமல் சுற்றுச்சூழலில் "வெளியேற்றப்படுகிறது".

உலக அளவில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள். இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா 4-ம் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்துள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த முதல் சட்டப்பூர்வ சர்வதேச உடன்படிக்கைக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் இந்த ஆய்வு வந்துள்ளது. 2022 இல், UN சுற்றுச்சூழல் சபை அத்தகைய ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக்கொண்டது - இது 2015 இல் பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு மிக முக்கியமான சுற்றுச்சூழல் உடன்படிக்கையாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

இந்தியாவிலும் கழிவு மேலாண்மையினை சிறப்பாக பயன்படுத்தினால் நாமும் இந்த கெட்ட பெயரில் இருந்து தப்பலாம். உலக சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News