இஸ்ரேல்- ஹமாஸ் மோதலில் இந்தியாவிற்கு புதிய சவால்..!

எங்கே அடித்தால் எது தீருமோ, அங்கே அடிப்பதில் இஸ்ரேலின் அதிரடியே தனி.;

Update: 2023-12-29 05:28 GMT

INS விக்ராந்த் கப்பல் (கோப்பு படம்)

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்துவரும் போருக்கு இடையே இப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிரியாவில் இருந்த ஈரானின் உச்ச நிலை ராணுவ தளபதி சையத் ராசி மிசாவியினை விமான தாக்குதலில் கொன்றிருக்கின்றது, இஸ்ரேல். ஈரானின் பின்னணியில் ஹமாஸ், கவுத்தி, ஹெஸ்புல்லா என எல்லா இயக்கங்களுக்கும் உண்டு என்பது ரகசியமல்ல. நிதியும் ஆயுதமும் வியூகமும் ஈரானாலே தான் கொடுக்கப்படும். ஆனால் ஈரான் நேரடியாக காட்சிக்குள் வராது.

இப்படி தன் மறைமுக கரங்கள் மூலம் இஸ்ரேலுக்கு அது நெருக்கடி கொடுக்கும் நிலையில், மிக துணிச்சலாக மிக உச்ச தளபதியினையே சரியான உளவுத் தகவல் மூலம் வீழ்த்தி விட்டது இஸ்ரேல்.

காசா யுத்தம் என போக்கு காட்டிக் கொண்டே, எது கட்டளை மையமோ அங்கே சரியாக அடித்து விட்டார்கள். ஏற்கனவே முன்பு சுலைமானி எனும் முக்கிய தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நிலையில் இப்போது அவரின் வலதுகரமான இந்த தளபதி இப்போது முடித்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

நிச்சயம் ஈரான் கொதிக்கும். ஆனால் நேரடியாக வராது, தன் இயக்கங்கள் மூலம் உக்கிர தாக்குதலை தொடுக்கலாம். இஸ்ரேலும் அதை எதிர்பார்த்தே தயாராக இருக்கிறது.

மகாபாரத அர்ஜூனன் போல் இஸ்ரேல் ஆடித் தீர்க்கும் நேரம் இது. இஸ்ரேல் அடிக்கும் அடியின் அதிர்வுகள் பல இடங்களில் கேட்கத்  தொடங்கி விட்டன. இந்தியாவும் இந்த காட்சிக்குள் வருகின்றது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1000 பேரைக் கொன்று 200 பேரை இழுத்துச்  சென்ற உடனே, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த முதல் நாடு இந்தியா.

மோடி தான் முதல் ஆதரவை தெரிவித்தார் அதன் பின்பு தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வந்தன. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இன்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடு எனும் வகையில் இந்திய ஆதரவு சரியானது. மேற்கொண்டு ஐநாவில் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானங்களிலும் ஹமாஸ் மேல் குற்றச்சாட்டு இல்லை என்பதால் இந்தியா வாக்களிக்க மறுத்தது.

இந்தியா பாலஸ்தீன விடுதலையினை ஆதரிக்கும் நாடு. ஆனால் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடு என்பதால் அதன் நிலைப்பாடு இப்படியானது. இந்த நிலைப்பாட்டை இந்தியா எடுத்த போதே கொஞ்சம் சவால் இருப்பதையும் உணர முடிந்தது.

இப்போது அதன் சில காட்சிகள் தெரிகின்றன. செங்கடல் பக்கம் தாக்கப்பட்ட 15 கப்பல்களில் இந்திய கப்பல்கள் இரண்டு. அடுத்து டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்துள்ளது. ஆனால் யாருக்கும் காயமில்லை.

இவையெல்லாம் இந்தியாவுக்கு ஒருவித மிரட்டல் வருவதை அவதானமாய் சொல்கின்றன. நிச்சயம் இவை அரபு நாடுகளின் நிலைப்பாடு அல்ல. அரபு நாட்டு அரசுகளின் எதிர்ப்பு அல்ல என்பதால் பெரும் பாதிப்பு இல்லை.

ஆனால், ராஜதந்திரமாக தீவிரவாத குழுக்கள் இந்தியாவினை மிரட்டுவதை எளிதில் உணரலாம். கடல்வழி கப்பல் ஆபத்து இந்தியாவுக்கு மட்டுமல்ல. உலக நாடுகளின் சிக்கல் என்பதால் விவகாரம் வேறு. எனினும் இந்தியா தன் ஐ.என்.எஸ் விக்ரம்  கப்பல்களை  கொச்சி சென்னை, விசாகபட்டினம் போன்ற  மேற்கு கடல் பக்கம் அனுப்பி விட்டது. நாட்டின் காவலை வலுப்படுத்துகின்றது.

உள்நாட்டில் பெரிய பாதுகாவலை இந்தியா உருவாக்கி கொண்டிருக்கின்றது. மேற்கொண்டு மொசாத்துக்கும் இன்னும் பிரதான உளவு அமைப்புகளுக்கும் இந்தியாவில் பெரும் வலைபின்னல் இருப்பதால் கண்காணிப்பை வலுவாக்குகின்றது இந்தியா.

ராமர்கோவில் திறப்பு நேரம் சதிசெயல் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதால் தேசம் மறைமுகமாக பெரும் விழிப்பு நிலையில் இருக்கின்றது. இந்நேரத்தில்  காஷ்மீரின் பரூக் அப்துல்லா பாகிஸ்தானோடு பேசவேண்டும் என்கின்றார்.

பாகிஸ்தானோடு எல்லாம் பேசியாகி விட்டது. இப்போது இந்திய காஷ்மீர் நம்மோடு இணைந்து விட்டது. இனி அவர்கள் பக்கம் இருக்கும் காஷ்மீரை என்ன செய்ய வேண்டும் என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஆக அவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை, அவசியமுமில்லை.

இந்நிலையில் மீண்டும் பேசவேண்டும் என பாகிஸ்தான் தூதர் போல் பரூக் அப்துல்லா பேசுவது சரியல்ல.  அவரின் இன்னொரு மிரட்டல் தான் முக்கியமானது. பாகிஸ்தானோடு பேசாவிட்டால் இஸ்ரேல் காசா போல இங்கும் ஒரு சிக்கல் வெடிக்கும் என்கின்றார் அப்துல்லா. இது எந்த இந்தியராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்துல்லா மிரட்டுகின்றாரா அல்லது அழிவுகள் வரவேண்டும் என ஆசைப்படுகின்றாரா? என பாஜக தரப்பு பெரும் கொதிப்பினை காட்டுகின்றது.

எந்தச்  சூழலையும் சந்திக்க தேசம் தயார், இந்த அச்சுறுத்தல் வேலை இங்கே வேண்டாம் என கடும் மத்திய அரசு பதிலடி கொடுத்த பின் பரூக்அப்துல்லாவிடம் இருந்து சத்தமே இல்லை. பரூக் அப்துல்லா எப்படியான ஒரு மனநிலையில் அவர் இருக்கின்றார் என்பதை நினைக்கும் போதே அச்சம் மேலிடுகின்றது.

காசா சூழல் வரலாம் என அவர் சொல்வது சாதாரண வார்த்தை அல்ல என்பதால் எதிர்ப்பு பலமாகின்றது. அதாவது இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏழாயிரம் ஏவுகணை தாக்குதல்களை போல் அல்லது அதனை விட பெரிய தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கலாம் என்று பரூக்அப்துல்லா மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார் என்றே இந்திய தரப்பு கணிக்கிறது. குறிப்பாக பா.ஜ.க.,வினர் இந்த கருத்தை எதிர்த்து கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி ஏதாவது நடந்தால், இந்தியா தரும் பதிலடி இதுவரை உலகம் சந்திக்காத ஒரு விஷயமாக இருக்கும் என பா.ஜ.க.,வினர் இப்போதே கொந்தளித்து வருகின்றனர். பரூக்அப்துல்லாவின் இந்த மிரட்டலே இந்திய தரப்பினை கொந்தளிக்க வைத்துள்ளது. இருப்பினும் பாக்கிஸ்தானிடம் பேசப்போவதில்லை என்பதில் இந்திய தரப்பு உறுதியாக உள்ளது. ஆக ராமர்கோயில் திறப்பு, லோக்சபா தேர்தல்களம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பரூக்அப்துல்லா இந்திய அரசினை மிப்பெரிய உஷார் நிலைக்கு கொண்டு வந்து வைத்துள்ளார்.

இப்படி பல வகையான அச்சுறுத்தல்கள் உள்ளும் புறமும் இருந்தாலும் பாரத தேசம் எதனை கண்டும் அஞ்சுவதில்லை. தயங்குவதுமில்லை. அது தன் போக்கில் ராமர்கோவில் திறப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகின்றது. ஆனாலும் பாதுகாப்பில் பெரும் கவனத்தை வலுபடுத்தியிருக்கின்றது இது நல்ல விஷயம்.

பரூக் அப்துல்லா கேட்டபடியெல்லாம் பாரததேசம் பாகிஸ்தானிடம் பேசமுடியாது. வேண்டுமானால் அப்துல்லா தனியாக நின்று பேசிக்கொள்ளட்டும் யாரும் தடுக்கமாட்டார்கள். 

நன்றி: ஸ்டான்லி ராஜன்

Tags:    

Similar News