நம் தமிழகத்திற்கு அடுத்தடுத்த ஜாக்பாட்...! தொழில் வளம் பெருகப்போகுதுங்கோ..!
தமிழகத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 68 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்த நிலையில் அடுத்த மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோவின் 2ம் கட்ட பணிகளுக்கு 68 ஆயிரம் கோடி கேட்டார். தமிழ்நாடு முதல்வர் கேட்டதும் மத்திய அரசு உடனே கொடுத்தது. இப்போது கேட்காமலேயே அடுத்த ஜாக்பாட் பரிசை அள்ளி கொடுத்துள்ளது. என்ன என்று கேட்கிறீர்களா?.
ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படும் சாப்ஃரான் நிறுவன தயாரிப்பு இஞ்சின்களை நம் இந்தியாவில், தமிழகத்தில் தயாரிக்க இருக்கிறார்கள். இதற்காக 120 தகுதி வாய்ந்த இஞ்சினியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களே நம் இந்திய சொந்த தயாரிப்பு AMCA, மற்றும் புதியதாக உருவாக்கப்பட உள்ள தேஜாஸ் இரட்டை இஞ்சின் விமானங்களிலும் பங்கேற்க கூடும் என்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க நம் இந்திய அரசு தரப்பில் இலகு ரக ஒற்றை இஞ்சின் தேஜாஸ் விமானங்களுக்கான 91 அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இஞ்சின் வழங்குவதில் ஏற்படும் காலதாமத்திற்கு அபராதம் விதித்து அதிரடித்திருக்கிறார்கள். இது உலக அளவில் இந்த துறை சார்ந்த பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404, F414 இஞ்சின்கள் தான் தேஜாஸ் mk1A பயன்படுத்த இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் 2021வாக்கில் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தப்படி 2023 ஏப்ரல் மாதத்தில் டெலிவரி செய்து இருக்க வேண்டும். ஆனால் நிறுவனத்தின் சார்பில் 2024 செப்டம்பர் மாதத்தில் வழங்கி விடுவதாக வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்சமயம் இதனை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வழங்க அனுமதிக்க வேண்டிட..... இம்முறை இதற்கு அபராதம் விதித்து அதிரடித்திருக்கிறார்கள் இந்திய அரசு தரப்பில்.
இதற்கு நிறுவன தரப்பில் F404 இஞ்சின் உதிரி பாகங்கள் சில தென் கொரியாவில் இருந்து உரிய நேரத்தில் வரவில்லை என்பதால் கால தாமதம் என்கிறார்கள். மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள். இந்நிலையில் நம் அரசு தரப்பில் இம்முறை உரிய நேரத்தில் ஒப்பந்தந்தை முடித்து கொடுக்க வேண்டும் அல்லது என்னென்ன உதிரி பாகங்கள் தேவையோ அதனை இந்தியாவில் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என திடமாக சொல்லி இருக்கிறார்கள்.
ஆக.... கூடிய விரைவில் இந்த நிறுவனத்தின் அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை நம் இந்தியாவில் ஏற்படுத்தும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல அவர்களுக்கு... ஏற்கனவே நம் இந்திய டாட்டா குழுமத்தோடு இணைந்து இந்த ஆலை அமைத்து உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அது ஹெலிகாப்டருக்கான உதிரி பாகங்கள்.
இதே ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F414 இஞ்சினையும் இந்தியா கேட்டு ஒப்பந்தம் செய்து இருக்கிறோம் என்பதை நன்றாக கவனித்தில் கொள்ளுங்கள். ஏன் இப்படி ஆலாய் பறந்து கொண்டு இருக்கிறோம் நாம்.... நம்மால் சுயமாக ஓர் விமான இஞ்சினை உற்பத்தி செய்து விட முடியாதா என்பவர்களுக்கு.,??
யார் சொன்னது நாம் சொந்தமாக உற்பத்தி செய்யவில்லை என்று..? நமக்கு சொந்தமான GTRE யில் அதாவது நம் இந்திய அரசின் கீழ் கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாபிள்ஷ்மென்ட் நிறுவனத்தின் சார்பில் காவேரி எனப் பெயரிடப்பட்ட இஞ்சினை சொந்தமாக டிசைன் செய்து உற்பத்தி செய்து இருக்கிறோம்.
பலரும் இந்த இடத்தில் நாம் உற்பத்தி செய்துள்ள காவேரி இஞ்சின், அதி இயங்கு திறனில் தனது பிளேடுகள் வெப்பத்தின் அளவு காரணமாக உருக்குலைந்து விடுவதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. அதெல்லாம் முன்பு ஒரு காலத்தில்....... தற்சமயம் அட்டகாசமாக இயங்குகிறது. பல்வேறு கட்ட சோதனைகளை எல்லாம் வெற்றி கொண்டு இருக்கிறது. கடைசி கட்டமாக ரஷ்யா வரை கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அற்புதமாக இயங்கு திறனில் இருக்கும் இது நாம் எதிர்பார்க்கும் 120 கிலோ நியுட்டன் ட்ராக் த்ரஸ்டை வெளிப்படுத்தும் அளவிற்கு எட்டவில்லை என்பது தான் ஒரேகுறை. 98kN வரை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
சரி இத்திட்டம் தோல்வியா...? என்பவர்களுக்கு, தற்சமயம் நாம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பெறவுள்ள F404 அல்லது F414 இஞ்சின் சக்தி முறையே 85kN மற்றும் 95kN மட்டுமே கொடுக்கும் என்பதை ஒப்பிட்டு பார்த்தால் போதும் விஷயம் நன்றாக விளங்கிவிடும்.
அப்படி என்றால் நாம் சாதித்து இருக்கிறோமா என்பவர்களுக்கு.... நாம் நமது காவேரி இஞ்சின் செயல்திறனை விமான பறத்தல் சோதனையில் ஈடுபடுத்தி ஆய்வு செய்து பரிசோதனைகளை எல்லாம் செய்து பார்க்கும் அளவிற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்பதால் தான் வெளியே இருந்து வாங்குகிறோம். தவிர குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் பிடிக்கும் சமாச்சாரம் இது,ஏகப்பட்ட பொருட்செலவும் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது என்பதால் கொஞ்சம் பின் தங்குகிறோம்.
இதற்கு தீர்வு தான் என்ன....???
செயல்திறன் நிரூபிக்கப்பட்ட இஞ்சின் ரகங்களை தேர்வு செய்து இங்கு நம் இந்திய தேசத்திலேயே உற்பத்தி செய்ய... தொழில் நுட்ப பண்புகளை பகிர்ந்து கொள்ளும் நிறுவனங்களோடு கூட்டு சேர இந்தியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இதன் வீரியம் நம்மில் பலருக்கு சரியாக புரியவில்லை.
இந்த உலகிலேயே எதிர் எதிர் நிறுவனங்களாக உள்ளவர்களை ஓரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கு சமமாக அமெரிக்காவின் புகழ் பெற்ற போயிங் நிறுவனத்தையும் ஐரோப்பிய நாடுகளின் பெயர் போன ஏர்பஸ் நிறுவனங்களையும் நம் இந்திய டாட்டா குழுமம் ஒப்பந்தம் மூலம் இங்கு நம் இந்திய தேசத்தில் ஆலை அமைத்து தொழிற்சாலை ஏற்படுத்தி உற்பத்தியை தொடங்கி இருக்கிறார்கள்.
இது தான் இதனை தான் சில நாட்களுக்கு முன்பு நம் பாரதப் பிரதமர் குஜராத் மாநிலத்தில் வதோதராவில் உள்ள டாட்டா அன்வாஸ்டு சிஸ்டம் லிமிடெட் (TASL) மூலம் ஏர்பஸ் நிறுவன C-295 விமானங்களை ராணுவ பயன்பாட்டிற்கென ஸ்பெயின் அதிபர் ப்ஃடுரோ சான்சேவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
56 விமானங்களில் 16 மட்டுமே அங்கிருந்து வரும் மீதியுள்ள நாற்பதும் இங்கு இந்த ஆலையில் இருந்து 2026 ஆண்டு வாக்கில் ஒவ்வொரு கட்டமாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் பயணிகள் விமானங்களுக்கும் பெயர் பெற்ற நிறுவனம். நாளையே இது பயணிகள் விமானங்கள் உற்பத்தி நோக்கி நகரும் என்பதில் சந்தேகமில்லை. இது வெளிப்பார்வைக்கு மேற்சொன்ன விமானங்களின் உதிரி பாகங்கள் 23%முதல் 31% வரையில் ஹைதராபாத் அருகில் தொழில்நுட்ப கூடத்தில் தயாரிக்க இருக்கிறார்கள்.
அதுபோலவே நம் தமிழகத்தில் சென்னையில் ரஃபேல் விமானங்களின் இஞ்சினான சாப்ஃரான் நிறுவன தயாரிப்பு இஞ்சின்களை இங்கேயே லைசென்ஸ் பெற்று உற்பத்தி செய்ய இருக்கிறார்கள். பார்ப்பதற்கு ஆங்காங்கே பரவலாக வைத்து உற்பத்தி செய்ய செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கிறதே என்றால் அது தான் இல்லை. ஒரே இடத்தில் முடக்குவதற்கு பதிலாக பரவலாக வைத்திருப்பதிலும் விஷயம் இருக்கிறது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இதில் அடங்கும். அதேசமயம் பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
போக்குவரத்திற்கு தான்.... புதிதாக உருவாக்கப்பட்டுவரும் சென்னையில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தப் போகிறார்கள். நீங்கள் நினைப்பது போல அது பெங்களூரோடு முடிந்துவிடப் போவதில்லை. அது பெங்களூரை தொட்டு மும்பை வரை... இன்னமும் சரியாக சொல்வதென்றால் குஜராத் மாநிலத்தின் ஓர் துறைமுகம் வரையில் அமைக்க இருக்கிறார்கள். அந்நாளைய மெட்ராஸ் பாம்பே கிராண்ட் ட்ரங்க் ரோடு போல... இது நம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஓர் அங்கமாக மாறும்.
அத்தோடு முடிந்துவிடும் விஷயம் இல்லை.
இது மேற்சொன்ன திட்டமிடல் INSTC ஓர் பாகமாக மாறிட கூடும் என்கிறார்கள். அது என்ன INSTC , இன்டர்நேஷனல் நார்த் சௌத் டிரான்ஸ்போர்ட் என்கிற புதிய பாதையில் ரஷ்யாவில் இருந்து ஈரானிய மார்க்கத்தில் நிலம் நீர் வழியாக நிலக்கரியை குஜராத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து சமீபத்திய சாதித்து காட்டினார்களே அதே சமாச்சாரம் தான்.
அதனை அந்த துறைமுகத்தில் இருந்து மேற்கில் இருந்து கிழக்காக சென்னை துறைமுகம் வரைக்கும் அதி நவீன சாலை வசதிகளை ஏற்படுத்த இருக்கிறார்கள். இதே சாலையில் விமானங்களின் உதிரி பாகங்கள் முதற்கொண்டு பலவும் வெகு சுலபமாக பயணிக்க இருக்கின்றது.
ஓர் புள்ளி விவர ஆய்வறிக்கையின்படி இன்றைய தேதியில் இந்த உலகில் படு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக இந்திய விமானத் துறை விளங்கும் என்கிறார்கள் அவர்கள். இது உச்ச கட்டமாக 67% வளர்ச்சி காணும் துறையாக மாறிடப்போகிறது என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.
அடுத்து வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் நம் நிலப்பரப்பின் அடையாளமே மாறப் போகிறது. மிகப்பெரியதொரு வர்த்தக வாய்ப்பு அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்களை நம்மில் பலரும் அவதானிக்கவே முடியாமல் தவறிவிடுகிறார்கள். காரணமும் யாவரும் அறிந்ததே. ஜெனரல் எலக்ட்ரிக் மட்டுமல்ல ஜெனரல் அட்டாமிக்ஸ் என்கிற ஓர் நிறுவனமும் இருக்கிறது.
இவர்கள் தான் இந்த உலகின் அதி உன்னதமான ஆளில்லா உளவு விமானமான MQ-9 ரீப்பரை உற்பத்தி செய்பவர்கள். நாம் தற்சமயம் இந்த உளவு விமானங்களை வாங்கி பயன் படுத்திக் கொண்டு வருகிறோம். இதிலேயே ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்திடவும் முடியும். செய்தும் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பலரையும் இப்படி இந்த முறையில் போட்டுத் தள்ளியும் இருக்கிறது.
இவற்றை நம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்று உற்பத்தி செய்து அசத்தி இருக்கிறார்கள். அதேபோன்று சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் சொந்தமாக செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை விண்ணில் ஏவி அசரடித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இது போலான 16 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகின்றது.