கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஜூலை 31 விடுமுறை
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் ஜூலை 31ம் தேதியான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
கேரளாவில் கனமழை காரணமாக பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை இல்லாத பேரழிவு ஏற்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதுவரை இல்லாத பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.மீட்புப் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திடீரென்று பொழிந்த அதி கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 48 மணி நேரத்தில் 580 செ.மீ.,ஐ தாண்டி மழை பெய்துள்ளது.
மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விமானப்படையின் 2 விமானங்கள், ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மண்ணில் புதைந்தும், எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வயநாட்டில் 45 முகாம்கள் உட்பட மாநிலம் முழுவதும் 118 முகாம்களில் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்துள்ளார்.