அயோத்தி ராமர் கோவில் மூடப்பட்டது என பரவிய புரளியால் பரபரப்பு
கூட்ட நெரிசலால் ராமர் கோவில் சிறிது நேரத்திற்கு மூடப்பட்டது என புரளி பரவியது. இதனை அயோத்தி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. இதனை, லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி வழியேயும் மற்றும் அருகிலுள்ள கோவில்களில் இருந்தபடியும் கண்டு களித்தனர். விழாவில் பிரதமர் மோடி, குழந்தை ராமரின் 51 அங்குல சிலையின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலுக்குள் இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் 2.5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த நாளின் முடிவில், மொத்தம் 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு வீரர்கள், பணிக்கு அமர்த்தப்பட்ட தெருக்களில், கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்களில் பலரும் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி இருந்தனர். நுழைவாசல் வழியே அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.
கடும் குளிரில், கடவுள் ராமரின் முகத்துடன் கூடிய கொடிகளை ஏந்தியபடி, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் மணிக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்தனர்.
காலையில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தில் ஒருவர் மயங்கி சரிந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். நண்பகலில், நேரம் செல்ல செல்ல, கூட்ட நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்தனர்.
இதனால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறினர். நுழைவாசலை நோக்கிய ராமர் பாதை பகுதி முழுவதும், பக்தர்களால் மறிக்கப்பட்டு இருந்தது. சிலர் சூட்கேஸ்களுடனும், சிலர் பைகளை தோளில் போட்டபடியும் தரிசனம் செய்வதற்காக காத்திருந்தனர்.
எனினும், கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. வரிசையாக நிற்க வைத்து, முறையாக தடுப்புகளையும் அமைத்து பக்தர்கள் சீராக அனுமதிக்கப்பட்டனர் என அயோத்தி டிவிசனல் கமிசனர் கவுரவ் தயாள் கூறியுள்ளார்.
இதேபோன்று உத்தர பிரதேச தகவல் இயக்குநர் ஷிஷிர் கூறும்போது, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு, அனைத்தும் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, அரை வட்ட வடிவிலான மனித வேலியை பாதுகாவலர்கள் அமைத்தனர். ஒலிப்பெருக்கிகள் வழியே அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட்டனர். முக்கிய வாசல் பகுதிகளில் நேற்றிரவு முதல் பக்தர்களின் வருகை அதிகரித்தது.
ஒரு சிலர் கோவிலின் மாதிரி வடிவத்துடன் வந்திருந்தனர். சிலர் ஓட்டல்களில் அறைகள் கிடைக்காமல் ஆசிரமத்தில் தங்கினர். இந்த சூழலில், கூட்ட நெரிசலால் ராமர் கோவில் சிறிது நேரத்திற்கு மூடப்பட்டது என புரளி பரவியது. இதனை அயோத்தி போலீசார் மறுத்துள்ளனர்.