ஹனுமந்தப்பா காலமான பிப்., 11 நாடே சோகத்தில் மூழ்கிய தருணம்..!

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி புதையுண்டு ஆறு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட இந்திய ராணுவவீரர் ஹனுமந்தப்பா 5 ஆண்டுக்கு முன் பிப்., 11ல் உயிரிழந்தார்.

Update: 2024-02-12 04:59 GMT

ஹனுமந்தப்பா (கோப்பு படம்)

காஷ்மீர் மாநிலத்தில், கடல் மட்டத்தில் இருந்து 20,500 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலையில் அன்னிய சக்திகள், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நமது ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். உடலை உறையச் செய்யும் கடும் குளிரில் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 10 வீரர்கள் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பிப்., 3ம் தேதி ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவில் சிக்கினர்.

35 அடி ஆழத்தில் பனிக்கட்டிக்குள் அவர்கள் புதையுண்டனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களில் தமிழக வீரர்கள் 4 பேர் உள்பட 9 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதால் அவர்கள் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் மருத்துவ உலகமே அதிசயிக்கும் விதமாக, 6 நாட்களுக்கு பிறகு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சியாச்சின் கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் பனியில் புதையுண்டு கிடந்ததால் அவருடைய கல்லீரல், சிறுநீரகங்கள் செயல் இழந்து அவர் கோமா நிலையை அடைந்தார்.

அவருக்கு ராணுவ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவருடைய உயிரை காப்பாற்ற போராடினர். ஹனுமந்தப்பாவின் உடலில் ரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஹனுமந்தப்பாவின் சிறுநீரக செயல்பாடு மோசமான நிலையிலே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மூச்சுவிடவும் சிரமப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 5 ஆண்டு முன்பு பிப்ரவரி 11ம் தேதி காலையில் கூட பரிசோதனை செய்த டாக்டர்கள் தரப்பில் அவருக்கு உயிர் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அன்று 11:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார் . இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ”நம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டு அவர் மறைந்து விட்டார். ஹனுமந்தப்பாவிற்கு எனது இரங்கல். அந்த வீரர் எப்போது நம் நினைவில் இருப்பார். இந்தியாவிற்கு சேவை செய்வதற்காக உயிர் தியாகம் செய்த அவரை நினைத்து பெருமை கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News