திருப்பதியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த இலவச சிகிச்சை

திருப்பதியில் தேவஸ்தானத்தின் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த எலும்பு நோய் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

Update: 2023-08-05 04:23 GMT

திருப்பதி தேவஸ்தான எலும்பு மருத்துவமனை 

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில்,BIRRD Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதுவும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை. நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இங்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

எப்படி அணுக வேண்டும்?

பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும். முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள்.

ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள். முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், தேதியை  குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள்.

குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து விடுவார்கள். பின்,அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள் தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள்.

மீண்டும், அவர்கள் குறிப்பிடும் தேதியில் சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர். தேவைப்பட்டால், காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்து விட்டு ஊர் திரும்ப வேண்டியது தான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் அவற்றை நீக்கி ஊர் வந்து சேர வேண்டியது தான்.

மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் இரண்டாம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள்.

வசதிகள்: சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு, தங்கும் இடம், மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

அறுவை சிகிச்சை முதல்  கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

எப்படி செல்வது?

திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் (அல்லது) அலிப்பிரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர். அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் பிளாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3 கொண்டு செல்ல வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை. இங்கு சிகிச்சை பெற சிபாரிசு தேவையில்லை. ஜாதி, மதம்,மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை. 5 வயது முதல் 55 வயது வரை பாதிப்பு உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில், பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ் வசதி உண்டு. பல லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் மருத்துவ சிகிச்சை இங்கு (TTD) முற்றிலும் இலவசம். இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Tags:    

Similar News