மீன்வளம் குறித்த இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம்

தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.;

Update: 2022-03-27 11:43 GMT

மீன்வளம் குறித்த இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஐந்தாவது கூட்டம் கடந்த 25-ந்தேதி மெய்நிகர் வடிவில் நடைபெற்றது. இந்தியக் குழுவுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலர்  ஜதிந்திரநாத் ஸ்வைன் தலைமை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகம் , வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசு, இந்திய கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தரப்புக்கு அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சகத்தின் செயலர்  ஆர்.எம்.ஐ. ரத்னாயகே தலைமை வகித்தார். இந்தியா, இலங்கை இடையே நீண்டகாலமாக இருந்து வரும் மீனவர்கள், மீன்பிடி படகுகள் பிரச்சினை உள்பட இருதரப்பு விஷயங்கள் பற்றி கூட்டுப் பணிக்குழு விரிவான விவாதம் நடத்தியது.

மீனவர்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரம் பற்றிய மனிதாபிமான விஷயத்தில் இந்தியாவின் ஆக்கபூர்வமான அர்ப்பணிப்பை திரு ஜதிந்திர நாத் குறிப்பிட்டார். தற்போது இலங்கையின் வசம் உள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விரைவாக விடுவிப்பது குறித்து அவர் இலங்கை தரப்பிடம் வலியுறுத்தினார். பாக் நீரிணைப் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்க இலங்கையுடன் சேர்ந்து கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளத் தயாராக இருப்பதை இந்தியத் தரப்பு எடுத்துக் கூறியது.

கடற்படை, கடலோரக் காவல் படை கூட்டு ரோந்து, கடத்தல் தடுப்பு, இருதரப்பு மீனவர்களின் கவலைகளைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட இருதரப்பு விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி புதுதில்லியில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் கொழும்பில் 2017 ஏப்ரல் 7-ல் நடந்தது. மூன்றாவது கூட்டம் அதே ஆண்டில் அக்டோபர் 13-ந்தேதி புதுதில்லியிலும், நான்காவது கூட்டம் 2020 டிசம்பர் 30-ந்தேதி மெய்நிகர் வடிவிலும் நடைபெற்றன.

Tags:    

Similar News