'முட்டையை காணோம்' வடிவேலு பாணியில் விவசாயி போலீசில் புகார்.
எவ்வளவு தீவனம் சாப்பிட்டாலும் முட்டை மட்டும் போடவில்லை என்று விவசாயி புகார் அளித்துள்ளார்.
புனேயில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் விவசாயி ஒருவர் போலீசில் ஒரு விசித்திர புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த ஒரு வாரமாக கோழிகள் வயிறுமுட்ட சாப்பிடுகின்றன. ஆனால், முட்டை மட்டும் போடவில்லை என்று போலீசில் புகாரளித்துள்ளார்.
புனேயில் உள்ள லோனி கால்பர் தாலுகா, ஆலந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கோழிகளின் தீவனத்திற்கு அருகில் உள்ள ஒரு கோழி தீவன நிறுவனத்தில் தீவனம் வாங்குகிறார். இந்த தீவனத்தை கோழிகள் வயிறு முட்ட சாப்பிடுகிறது. ஆனால், நன்றாக சாப்பிட்ட கோழிகள் முட்டை மட்டும் போடவில்லை. இதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதில், வேதனை அடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர்,கோழி தீவன நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோழிகள் தீவனத்தை நன்றாக சாப்பிடுகின்றன. தின்ற பின்னும் எனது கோழிகள் முட்டையிடவில்லை. இது தொடர்பாக தீவன நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம், சினிமாவில் நடிகர் வடிவேலு கிணறை காணவில்லை என காமெடி பண்ணுவது போல் இருந்தாலும் கூட, விவசாயி தனது வேதனையை நூதன முறையில் வெளிப்படுத்தியதை போலீசார் உணர்ந்தனர். இதனால், புகார் மீது வழக்குப்பதிவு செய்து கோழித்தீவன நிறுவனத்திடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.