இனி கண் கண்ணாடி தேவையில்லை; சொட்டு மருந்து போதுமே...!
முதன் முறையாக கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;
இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனம். புதிய கண் சொட்டு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும் போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர வயதில், இயற்கையாகவே கண் பார்வை குறைபாடு ஏற்படுவோர் மற்றும் ப்ரெஸ்பியோபியா போன்ற குறைபாடுகளை புதிய கண் சொட்டு மருந்து சரி செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்டோட் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் 'பிரெஸ்வு' (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால், படிக்கும் போது மட்டும் சிறு எழுத்துகள் தெரியாததால் கண்ணாடி அணிபவர்கள், பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என்றும், இதன் விலை ரூ.350 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த மாதம், இந்த கண் சொட்டு மருந்துக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்றதொரு சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.