EPFO பணத்தை இப்படியும் திருடுறாங்க ஆதார் தகவலை வைத்து நடக்கும் மோசடி!
ஆதார் கார்டு தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி (PF) அக்கவுண்ட்களில் இருந்து பணத்தை திருடுகின்றனர்.
ஆதார் கார்டு தகவல்களை தவறாக பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி (PF) அக்கவுண்ட்களில் இருந்து பணத்தை திருடுகின்றனர் என்ற தகவல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி சம்பவம் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், ஆதார் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி சுமார் 11 EPF அக்கவுண்ட்ஸ்களில் இருந்து, ரூ.1.83 கோடியை மோசடி குழுவினர் திருடி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். இந்த மோசடி சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட டெல்லியை சேர்ந்த பிரியன்ஷு குமார் தனது கூட்டாளிகளின் உதவியோடு இந்த மோசடியை அரங்கேற்றி இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்த கும்பல் ஆதார் கார்டை தங்கள் PF அக்கவுண்ட்ஸ்களுடன் இணைக்காத நபர்களை குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 39 போலி PF கிளைம்கள் மூலம் 11 ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறி வைக்கப்பட்டு ரூ.1.83 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
மோசடி நடந்தது எப்படி.?
இந்த கும்பல் பல்வேறு நகரங்களில் நிறுவனங்களை நிறுவி, உண்மையான பயனாளிகளின் (Beneficiaries) UAN-ஐ (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை) பதிவு செய்து உள்ளது. இதன் மூலம் இந்த Beneficiaries-கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது போல இந்த மோசடி கும்பல் காட்டி கொண்டது. உண்மையான பயனாளிகளின் KYC விவரங்கள் மீதான கட்டுப்பாட்டை பெற இந்த வேலையில் மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த கும்பல் ஆதார் தகவல்களை கையாண்டு குறிப்பிட்ட Beneficiaries-களின் PF கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளது. சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில், பீகார், ஜார்கண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் இருந்து மோசடி கும்பல் பயன்படுத்திய ஆவணங்கள், மொபைல் போன்கள், ஏடிஎம் கார்டுகள், காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ்புக்ஸ் போன்ற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
முன்னதாக உண்மையான பயனாளிகளின் PF அக்கவுண்ட்ஸ்களில் இருந்து சட்டவிரோதமாக பணத்தை எடுப்பதை நோக்கமாக கொண்ட அடையாளத் திருட்டு நடந்துள்ளதாக EPFO அமைப்பு புகார் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 8, 2022-ல் 7 நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி சம்பவம் PF அக்கவுண்ட்ஸ்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளதோடு, இது போன்ற மோசடி சம்பவங்களை தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வு தேவை என்பதை உணர்த்துகிறது.
உங்கள் PF அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைக்க மற்றும் அங்கீகரிக்கப்படாத உரிமைகோரல்களை (unauthorized claims ) கடினமாக்க உங்கள் PF அக்கவுண்ட்டை, உங்கள் ஆதாருடன் இணைப்பது அவசியம். அதே போல சீரான இடைவெளியில் உங்கள் PF அக்கவுண்ட்டை தவறாமல் கண்காணித்து, சந்தேகத்திற்கிடமான விஷயங்களை பார்த்தால் உடனடியாக EPFO அமைப்பிடம் புகாரளிப்பது மோசடி பரிவர்த்தனைகளை தடுக்க உதவும்.