சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை வழங்கிய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
மாற்றுத் திறனாளிகள் கௌரமாக வாழும் சூழலை உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கூறினார்
டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது: இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கௌரவமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை.
மாற்றுத் திறனாளிகள் தங்களது பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு துறையிலும் மாற்று திறனாளிகள் சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் நாம் உருவாக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி மிக முக்கியப் பங்காற்றுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.
தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.