அவசரகால கடன் திட்டம் : சுகாதார துறையும் சேர்ப்பு

அவசரகால கடன் திட்டத்தில் சுகாதாரத்துறையையும் மத்திய அரசு சேர்த்துள்ளது.

Update: 2021-04-19 07:14 GMT

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையை சேர்ந்த நிறுவனங்களும் இனி கடன் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் குறு, சிறு, நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை நிதியமைச்சகம் அறிவித்தது. அதன்படி, குறிப்பிட்ட சில துறைகளை சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது சுகாதாரத்துறையும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்துறையை சேர்ந்த நிறுவனங்களும் இனி இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம். அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் பிணை எதுவும் இன்றி கடன் பெற்றுக்கொள்ள முடியும். அரசே வங்கிகளுக்கு கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கிவிடும்.

இந்த கடன்கள் 12 பொதுத்துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த  கடன் உத்தரவாதத்தை 26 துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்க கே.வி.காமத் குழு பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாதத்துடன் இந்த திட்டம் முடிவடைய இருந்த நிலையில், ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்தது. தற்போது சுகாதார துறையும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News