இழிவுபடுத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

'சமூக ஊடகங்களை பயன்படுத்தி, நீதித் துறை அதிகாரிகளை யாரும் இழிவுபடுத்தக் கூடாது' என, உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Update: 2023-05-31 18:00 GMT

பைல் படம்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் ரகுவன்ஷி என்பவர், கோயில் தொடர்பான விவகாரத்தில், மாவட்ட நீதிபதி குறித்து, சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்'பில், ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த விவகாரத்தில், தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், கிருஷ்ணகுமார் ரகுவன்ஷிக்கு, 10 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, கிருஷ்ண குமார் ரகுவன்ஷி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: உச்ச நீதிமன்றத்திற்கு சட்டப்படி முடிவு எடுக்க வந்துள்ளோம்; கருணை காட்ட வரவில்லை. நீதிபதி குறித்து அவதுாறு தெரிவிப்பதற்கு முன், மனுதாரர் யோசித்திருக்க வேண்டும். நீதிபதியின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பை பற்றி சிந்தியுங்கள். சாதகமான உத்தரவு கிடைக்காததால், நீதித் துறையை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. இந்த வழக்கு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News