கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன சொல்றார்?

உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி கோவிஷீல்டு என்பதால், உலகெங்கிலும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

Update: 2024-05-08 05:07 GMT

கொரோனா தடுப்பூசி கோவாக்சின், கோவிஷீல்டு (கோப்பு படம்)

கொரோனா குழப்பம் இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது கோவிஷீல்டு வடிவத்தில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், அனைத்து நாடுகளையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதனை எதிர்கொள்ளும் முயற்சியாக தடுப்பூசி முயற்சிகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டன.

கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை இந்தியா தனது சொந்த முயற்சியில் தயாரித்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா என்ற மருந்து நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியைத் தயாரித்தது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுடன் பெரும்பாலான நாடுகளில் கோவிஷீல்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியாவிலும் கோவாக்ஸின் தடுப்பூசியுடன், அஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவர் விஜயலட்சுமி

ஏறக்குறைய 4 வருடங்கள் கடந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மூளையில் கட்டி உண்டானதாக இங்கிலாந்தில் ஜேமி காட் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மேலும் 51 வழக்குகள் இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வந்தன. இந்த வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக பக்க விளைவுகள் உண்டாகலாம் என்று விளக்கமளித்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி கோவிஷீல்டு என்பதால், அஸ்ட்ராஜெனகாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் உலகெங்கிலும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்தியாவிலும் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவர் விஜயலட்சுமி கூறியதாவது:

``இங்கிலாந்தில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் 200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இது 2021-ம் ஆண்டில் போடப்பட்ட தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்ட வழக்கு. இந்த வழக்கில் 'விஐடிடி' (Vaccine Induced immune thrombotic thrombocytopenia -VITT) என்கிற பிரச்னை கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று அஸ்ட்ராஜெனகா பதிலளித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்தே தற்போது விவாதம் நடந்து வருகிறது.

தடுப்பூசியினால் வரும் பக்கவிளைவு சிலருக்கு சமாளிக்கக் கூடிய அளவு மிதமானதாகவும், சிலருக்கு தீவிரமானதாகவும் இருக்கலாம். இந்தத் தீவிர பாதிப்பின் விகிதமும் ஒட்டுமொத்த டோஸ் அளவுகளைக் கணக்கிடும்போது மிகமிகக் குறைவான விகிதமாகவே இருக்கும். அதாவது 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கும்போது அவர்களில் 10 பேருக்கு பக்கவிளைவு உண்டாகியிருக்கலாம். ஒட்டுமொத்த தடுப்பூசியின் விகிதத்தில் பார்க்கும்போது இது 0.1 என்கிற சதவிகிதமாகவே இருக்கும். மொத்த இங்கிலாந்திலுமே கோவிஷீல்டு போடப்பட்டுள்ளதில் குறைவான பதிவுதான் இது.

பொதுவாக எந்தத் தடுப்பூசியும் விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்த பிறகு, மனிதர்களிடம் நடத்தப்படும். மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் 4 கட்டங்களாக நடைபெறும். பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த பிறகும் தடுப்பூசி பற்றிய கண்காணிப்பும் தொடரும். இந்தியாவில் இதற்கென தனி செயலி (App) பயன்படுத்துகிறோம். அப்படி தொடர்ச்சியான கண்காணிப்பில்தான் VITT என்கிற சிண்ட்ரோம் 2020-ம் ஆண்டே கண்டறியப்பட்டது. அப்போதே VITT பிரச்னைக்கான சிகிச்சையும் வரையறுக்கப்பட்டு விட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் 2021-ம் ஆண்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அது குறித்த தெளிவும் இருந்தது. சிகிச்சை பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளும் இருந்தன. அதனால் இந்தியாவில் VITT சிண்ட்ரோம் பிரச்னையைப் பெரிதாகப் பார்க்க முடியவில்லை. தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு உதவும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. இந்த நடைமுறையின்போது சில பக்கவிளைவுகள் உண்டாகும் வாய்ப்பு உண்டுதான். ஆனால், அந்தப் பக்கவிளைவு எந்த சதவிகிதத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் கவனிக்க வேண்டும். அந்த பாதிப்பு 0.1 என்கிற விகிதத்துக்கும் கீழ் அரிதாக இருந்தால்தான் பொதுமக்களின் பயன்பாட்டுக்கே அனுமதிக்கப்படும். நாம் தற்போது விவாதிக்கிற பாதிப்பு விகிதம் இதற்கும் கீழாகவே உள்ளது.

கொரோனா தடுப்பூசியால் நீரிழிவு, மாரடைப்பு வருமா என்று சிலர் கேட்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நடந்த திடீர் உயிரிழப்புகள் (Sudden death) பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டுக் கொண்டவர்களிடம் பெரிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இன்னும் சொல்லப் போனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பலர் உயிர் பிழைத்துள்ளனர்.

ஆய்வுக்குட்படுத்திய 18 முதல் 45 வயதுக்குட்டப்பட்டவர்களில் தீவிர கொரோனா பாதிப்பு, கொரோனா பாதித்த குடும்பப் பின்னணி, ஆல்கஹால் பயன்பாடு, தீவிர உடற்பயிற்சி போன்றவையே உயிரிழப்புக்கான காரணங்களாக இருந்தன. இந்த ஆய்வுக்கட்டுரை 2023-ம் ஆண்டு வெளியானது. கொரோனா இரண்டாம் அலை முடிந்த சமயத்தில்தான் நாம் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருந்தோம். கோவிஷீல்டு போட்டுக் கொண்டதால் நன்மைகள்தான் நடந்துள்ளன.

பிரச்னை என்னவென்றால், கொரோனா நோய்த்தொற்றே ரத்த உறைவு தொடர்பானதாக (Thrombogenic infection) இருந்தது தான். கொரோனா முதல் அலையிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற சம்பவங்களை நிறைய பார்த்தோம். ரத்த நாளங்கள் உறைந்து போய் கால்கள் செயலிழக்கிற நோயாளிகளையும் நிறைய பார்த்தோம். இது இரண்டாம் அலை, மூன்றாம் அலையிலும் பதிவானது. அந்தக் காலகட்டத்தில் தடுப்பூசி சீக்கிரம் எடுத்துக் கொண்டவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைந்தது.

கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு முடி உதிர்வது, எலும்பு வலி, மாரடைப்பு, பக்கவாதம், உடல் வலி போன்ற பிரச்னைகள் வரலாம். ஆனால், அவற்றுக்கெல்லாம் தடுப்பூசிதான் காரணம் என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு. உலகம் முழுவதிலும் உள்ள 6 பில்லியன் மக்களில் சுமார் 5 பில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்தத் தடுப்பூசியினால்தான் கொரோனா அபாயத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். அதனால் பாதிப்பு தடுப்பூசியினால் வந்தது என்று சொல்வதைவிட, கொரோனாவால் வந்தது என்று புரிந்துகொள்வதே சரியானது.

ஆறு வாரங்களுக்குள் 

VITT சிண்ட்ரோமானது தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 வாரங்களுக்குள் வர வேண்டும். ஆனால், நாம் தடுப்பூசி போட்டுக் கொண்டு இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இனிமேல் ரத்த உறைவு, பக்கவாதப் பிரச்னை வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை. நான் கோவிஷீல்டு தடுப்பூசிதான் போட்டுக் கொண்டேன். என் பெற்றோருக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. அவர்களும் கோவிஷீல்டுதான் போட்டு கொண்டார்கள்.

மருத்துவமனையில் என்னுடன் பணிபுரியும் சக மருத்துவர்கள் பலரும் கோவிஷீல்டுதான் எடுத்துக் கொண்டார்கள். அவர்களின் 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்களும் கோவிஷீல்டுதான் எடுத்துக் கொண்டார்கள். எல்லோரும் ஆரோக்கியமாகவே இருக்கிறோம். இதையெல்லாம் சொல்லும் ஒரு மருத்துவரைக் கூட நம்ப வேண்டியதில்லை. ஆனால், அறிவியலை நம்புங்கள்.

கொரோனா ஒரு பெரும் அபாயமுள்ள தொற்றாக இருந்து, இன்று சாதாரண தொற்று நோயாக மாறியுள்ளதற்கு காரணம் தடுப்பூசிதான். கொரோனா தடுப்பூசி பற்றி பரவும் தவறான தகவல்கள், மற்ற நோய்களுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போதும் சந்தேகத்தை உண்டாக்கிவிடும். அதனால் தவறான தகவல்களை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்!

இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்குத்தான் ரிஸ்க்! கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை. இன்னும் கொரோனா நோயாளிகளைப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். இந்த வைரஸ் நம்முடனேதான் இருக்கும். ஆனால், இன்னும் தடுப்பூசி போடாதவர்களையும் பார்க்கிறோம். தடுப்பூசி போடாதவர்களுக்குத்தான் இப்போதும் ரிஸ்க் உள்ளது. உடனடி நிமோனியா, உயிரிழப்பு உண்டாகலாம். இவ்வாறு கூறினார்.

- நன்றி விகடன்.

Tags:    

Similar News