இந்திய எல்லையில் புதிய கிராமத்தை உருவாக்கும் சீனா!

அண்மைக் காலமாக இந்திய எல்லையில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.;

Update: 2023-06-11 11:45 GMT

குறிப்பாக சீனா ராணுவத்தினரால் இதுவரை சீண்டப்படாமல் இருந்து வந்த கிழக்கு லடாக், சிக்கிம், அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் உத்தரகாண்ட் மாநிலத்தை ஒட்டிய சர்வதேச எல்லையில் சீன ராணுவம் கிராமங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பான செயற்கைக்கோள் படங்களும் தற்போது வெளியாகி உள்ளன. இந்த கட்டமைப்புகள் மிக வேகமாக கட்டப்பட்டு வருவதும், ஒரு மாத கால இடைவெளியில் சுமார் 100 கட்டமைப்புகள் எழுப்பப்பட்டிருப்பதும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷியில் உள்ள புலம் சும்தா பகுதியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய கட்டமைப்புகள் உருவாகியுள்ளன. பரஹோதிக்கு அருகில் கிழக்கு நோக்கிய மற்றொரு பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடந்த சம்பவங்கள் முந்தைய ஆண்டுகளில் ஏற்கெனவே பதிவாகியுள்ளன.

சீன ராணுவம் நீண்ட காலமகாவே இந்திய எல்லையோரத்தில் புதிய கிராமங்களை அமைத்து மக்களை குடியேற்றி வருகிறது. விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகள் உட்பட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த கிராமங்களில் பெரும்பாலானவை தற்போது காலியாக உள்ளன. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த கிராமங்கள் உருவாக்கப்படுவதாக சீனா கூறிவந்தாலும் அவை பெரும்பாலும் சீன ராணுவத்தினரின் வசதிக்காகவே உள்நோக்கம் கொண்டு கட்டப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் கிராமங்களில் இருந்து இந்தியாவின் படைகளை நேரடியாக கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News