சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த மகேந்திரா சென்னை ஐ ஐ.டி.,யின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டூவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பறக்கும் டாக்சி தயாரிப்பில் சென்னை ஐ.ஐ.டி., வேகமான முன்னேற்றம் கண்டுள்ளது. நாட்டில் நிலவும் ரோடு நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சாலை போக்குவரத்து அபாயங்களை குறைப்பதில் இந்தியா வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இதன் ஒரு ஒரு கட்டமாக இந்த பறக்கும் கார் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த பறக்கும் கார் தயாரிப்பினை மேற்கொண்டுள்ளது. முழுக்க மின்பயன்பாட்டில் இயக்கப்படும் இந்த டாக்ஸி பயன்பாட்டிற்கு வந்தால், உலகின் முதல் மின்சார பறக்கும் காராக இது இருக்கும்.
இது, ஒரு மணி நேரத்தில் 200 கி.மீ., வேகத்தில் பறக்கும். இதனை தரையிறங்கவும், பறக்கவும், 15 அடி நீளமும், 15 அடி அகலமும் உடைய இடம் போதுமானது. இதில் இரண்டு பேர் பயணிக்க முடியும். இந்த டாக்ஸியில் 25 கி.மீ., துாரத்தினை பத்து நிமிடத்தில் சென்றடையலாம். இதன் மூலம் இந்தியா புதிய மற்றும் புதுமையான படைப்பாளிகளை கொண்ட திறன் மிகுந்த நாடாக மாறி வருகிறது. இந்தியாவின் உலகளாவிய வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல் என்று பதிவிட்டுள்ளார்.