மீண்டு வருகிறது பிஎஸ்என்எல் : மக்களவையில் தகவல்..!
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீண்டு வருகிறது.
பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் சற்று குறைந்துள்ளதாக மக்களவையில் மத்திய தொலைதொடா்புத் துறை இணையமைச்சா் பி.சந்திரசேகா் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலை தொடா்பு நிறுவனங்கள் அண்மையில் கட்டணங்களை உயா்த்தியதால், கைப்பேசி பயனாளா்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் புத்துயிர் பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மக்களவையில் பிஎஸ்என்எல் தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2023-24 நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 5,371 கோடியாகும். இதுவே 2022-23 நிதியாண்டில் ரூ.8,161 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது நஷ்டம் குறைந்துள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 1 லட்சம் இடங்களில் 4ஜி தொலை தொடா்பு சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க இருக்கிறது. இதற்காக கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருவிகளை 5ஜி சேவைக்கும் மேம்படுத்திக் கொள்ள முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ.69,000 கோடி, 2022-ஆம் ஆண்டு ரூ.1.64 லட்சம் கோடி பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ரூ.89,000 கோடி மதிப்புள்ள 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றையை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.