இலங்கைக்கு கடலில் பாலம்: ஆய்வை தொடங்கிய மத்திய அரசு
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடலில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டும் திட்ட ஆய்வு தொடங்கி உள்ளது.
ராவணனால் கடத்தி வரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமர் வானர சேனையின் உதவியுடன் இலங்கை வரையில் கடலில் பாலம் கட்டினார். பின்னர் அந்த பாலம் வழியாக இலங்கைக்கு சென்று இராவணனை அழித்து சீதையை மீட்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றது.
மேலும் ராவணனை அழித்த பாவம் நீங்க சீதை மணலால் லிங்கத்தை செய்து அந்த லிங்கத்திற்கு பூஜை செய்ததால் அந்த இடத்திற்கு ராமேஸ்வரம் என்று பெயர் வந்தது என்றும் கூறப்படுகின்றது. மேலும் தனுஷ்கோடியில் உள்ள மணல் திட்டுகள் ராமர் கட்டிய பாலம் என்று கூறப்பட்டு வருகின்றது. இதையடுத்து தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை கடலில் பாலம் கட்டும் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பல வருடங்களாகவே இந்திய அரசும் இலங்கை அரசும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடலில் பாலம் கட்டுவதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். மேலும் இலங்கை அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடலில் பாலம் கட்டுவதற்கு உண்டான திட்டத்தை தயார் செய்து இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஆலயத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 21ம் தேதி இராமேஸ்வரத்திற்கு வந்தார். பின்னர் தனுஷ்கோடிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அரிச்சல்முனை ராமசேது தீர்த்த கடலில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டார்.
இதையடுத்து பிரதமர். நரேந்திர மோடி இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வந்ததால் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் பாலம் கட்டும் திட்டத்திற்கு இரண்டு நாட்டு அரசுகளுக்கு இடையிலும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் 25 ஆயிரம் கோடி செலவில் உருவாகவுள்ள இந்த பாலத்தை கட்டுவதற்கு உண்டான சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது.