கேரளாவில் கணக்கை தொடங்கிய பாஜ! சுரேஷ் கோபி அபார வெற்றி
திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம் என சுரேஷ் கோபி கூறினார்;
ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் பிரஜா தெய்வங்கள்" என்றார் சுரேஷ் கோபி.
கேரள மாநிலத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் நேமம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றார். கேரள சட்டசபையில் நுழைந்த முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார் ஓ.ராஜகோபால். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் ஓ.ராஜகோபால் தோல்வியடைந்தார். இப்போது கேரளாவில் பா.ஜ.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ-கூட இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தல்வரை வென்றதில்லை.
இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் களமாடியது பா.ஜ.க. இரவு 8 மணி நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி 74,004 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த முடிவு ஆளும் சிபிஐ(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப்-க்கு அதிர்ச்சியை அளித்தது, சுனில்குமார் மற்றும் முரளீதரன் இடையே தான் போட்டி இருக்கும் என்று நினைத்தனர். தபால் வாக்குகளை எண்ணியபோது அவர்கள் கணிப்பு சரியாக தோன்றியது. ஆனால், கோபி அடுத்தடுத்த சுற்றுகளில் களமிறங்கினார், தொடர்ந்து முன்னிலையை அதிகரித்த அவர் பின்னர் திரும்பிப் பார்க்கவில்லை.
வலுவான முன்னணி மற்றும் ஈர்க்கக்கூடிய வெற்றியுடன், சுரேஷ் கோபி, காவி கட்சிக்கு கேரளா எப்போதும் ஆதரவளிக்காது என்ற நீண்டகால நம்பிக்கை தவறானது என்பதை நிரூபித்துள்ளார்
இதையடுத்து பா.ஜ.க வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சுரேஷ் கோபி கட்சித் தொண்டர்களுடன் நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா வீட்டின் முன்பு குவிந்தவர்களுக்கு பாயசம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கேரளாவில் பா.ஜ.க சார்பில் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்த சுரேஷ்கோபி கடந்த 5 ஆண்டுகளாக திருச்சூர் தொகுதியை மையமாகக்கொண்டு அரசியல் செய்து வந்தார். திருச்சூரில் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் சி.பி.எம் கட்சியினர் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த விவகாரத்தை கையில் எடுத்து போராடினார் சுரேஷ் கோபி. மேலும், பணத்தை இழந்த அனைவருக்கும் வட்டியுடன் திருப்பி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார் சுரேஷ் கோபி.
தேசிய விருது பெற்ற நடிகர் முன்பு 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இருப்பினும், அரசியலில் இருந்து பின்வாங்கத் தயங்கிய கோபி, தொடர்ந்து திருச்சூரில் கவனம் செலுத்தி, 2024 லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுகளில் ராஜ்யசபா எம்.பி.யாக தனது நிதியில் அதிக பங்கை இங்கு செலவழித்தார்.
காங்கிரஸ் சார்பில் வடகரா தொகுதி சிட்டிங் எம்.பி-யான கே.முரளீதரன் தொகுதி மாறி திருச்சூரில் களம் இறங்கியது சுரேஷ் கோபிக்கு பிளஸ் பாயின்டாக அமைந்தது. கே.முரளீதரனின் தங்கையும், கே.கருணாகரணின் மகளுமான பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவியதும் சுரேஷ் கோபிக்கு பலமாக அமைந்தது. சுரேஷ் கோபியின் மகளின் திருமணம் மற்றும் பிரச்சாரத்துக்கு என தொடர்ச்சியாக திருச்சூரைச் சுற்றியே பிரதமர் மோடியின் பிரசாரம் அமைந்ததும் தொண்டர்களை உற்சாகமாக்கியது. கேரள மாநிலத்தின் முதல் பா.ஜ.க எம்.பி என்ற வகையில் சுரேஷ் கோபி தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ்கோபி கூறுகையில், "திருச்சூரில் எனக்கு இந்த வெற்றியை நல்கிய அனைத்து கடவுள்களுக்கும், லூர்து மாதாவுக்கும் வணக்கம். ஒரு பெரிய போராட்டத்திற்கு கூலியாக கடவுள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி. திருச்சூர் வாக்காளர்கள் தெய்வங்கள். மக்களை நான் வணங்குகிறேன். வாக்காளர்களை திசைமாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் கடவுள்கள் அவர்களுக்கு வழிகாட்டினர். கேரளாவின் எம்.பி-யாக நான் செயல்படுவேன். ஒட்டுமொத்த கேரளாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்" என்றார்.