அயோத்தியைப் போல, குஜராத்திலும் தோற்கடிப்போம் : ராகுல் காந்தி ஆவேசம்..!
அயோத்தியை வீழ்த்தியதை போல் குஜராத்தையும் வீழ்த்துவோம் என ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.;
பா.ஜ.க-வின் கோட்டையான குஜராத் பக்கம் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார் ராகுல்காந்தி. காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநிலத் தலைமையகம் தாக்கப்பட்டவுடன் அங்கு விரைந்த ராகுல், ‘அயோத்தியில் தோற்கடித்ததைப்போல, குஜராத்திலும் பா.ஜ.க-வைத் தோற்கடிப்போம்’ என்று சூளுரைத்திருக்கிறார். மோடியின் கோட்டையான குஜராத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதானதா?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ஆனவுடன், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரை பா.ஜ.க-வினரைக் கொந்தளிக்கவைத்தது. குறிப்பாக, ‘இந்துக்கள் வன்முறை, வெறுப்பைப் பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க-வினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்’ என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக, ‘இந்துக்களை வன்முறையாளர்கள் என்று விமர்சிப்பதா?’ என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினையாற்றினார்கள்.
ராகுல் காந்திக்குக் கண்டனம் தெரிவித்து பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஜூலை 2-ம் தேதி போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து காங்கிரஸாருக்கும், பா.ஜ.க உள்ளிட்ட அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து, கல்வீச்சு சம்பவமும் அரங்கேறியது. அதன் உச்சமாக, அகமதாபாத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான ராஜிவ்காந்தி பவன் தாக்கப்பட்டது.
உடனே குஜராத்துக்கு விரைந்த ராகுல் காந்தி, தாக்குதலுக்கு உள்ளான ராஜிவ்காந்தி பவனைப் பார்வையிட்ட பிறகு, காங்கிரஸ் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, “பா.ஜ.க-வினர் நம்மை அச்சுறுத்தி, நமது அலுவலகத்தைச் சேதப்படுத்தி, நமக்கு சவால் விடுத்திருக்கிறார்கள்.
நம் அலுவலகத்தை அவர்கள் உடைத்தார்கள். நாம் அவர்களின் அரசைத் தகர்க்கப்போகிறோம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்… அயோத்தியில் எப்படி பா.ஜ.க-வைத் தோற்கடித்தோமோ, அதேபோல குஜராத்தில் நரேந்திர மோடியையும், பா.ஜ.க-வையும் தோற்கடிப்போம். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெறும்” என்றார் ராகுல் காந்தி.
“குஜராத்தில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்போம் என்று ராகுல் எளிதாகச் சொல்லிவிட்டார். ஆனால், அங்கு பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. இன்றைக்கும் பா.ஜ.க-வின் பலமான கோட்டையாகவே குஜராத் விளங்குகிறது. சொல்லப்போனால், மோடி முதல்வராக இருந்த காலத்தைக் காட்டிலும், அவர் பிரதமரான பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
மோடி முதல்வராக இருந்தபோது, 2004 மக்களவைத் தேர்தலில் 11 இடங்களிலும் (மொத்த இடங்கள் 26), 2009 மக்களவைத் தேர்தலில் 12 இடங்களிலும் காங்கிரஸ் ஜெயித்தது. ஆனால், 2014, 2019 என அடுத்தடுத்து இரண்டு மக்களவைத் தேர்தல்களில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் கட்சியால் ஜெயிக்க முடியவில்லை. அதேபோல, மொத்தம் 182 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில், 2022 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 17 தொகுதிகளில்தான் காங்கிரஸ் ஜெயித்தது” என்கிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள்.
அரசியல் நோக்கர்களோ, “குஜராத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருந்த நிலையில் தான், 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பனஸ்கந்தா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெனிபென் தாக்கூர், 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் ரேகா சௌத்ரியைத் தோற்கடித்தார். இந்த வெற்றி, குஜராத் காங்கிரஸ் கட்சியினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்திருக்கிறது. அதேநேரம், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் ஜெயிக்க வேண்டுமென்றால், கடினமான பல சவால்களை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
காரணம், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் குஜராத்திகள் என்ற பெருமை அந்த மாநில மக்களிடையே இருக்கிறது. மேலும் பா.ஜ.க-வும், இந்துத்துவா அமைப்புகளும் வலுவான நிலையில் இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம், ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள், துர்காவாஹினி, பாரத் விகாஸ் பரிஷத், சேவா பாரதி போன்ற இந்துத்துவா அமைப்புகளின் மாவட்ட, வட்டார, கிராம அளவிலான நிர்வாகிகள் விளிம்புநிலை சமூகத்தினராக இருப்பது தான். காங்கிரஸ் கட்சியோ, தன்னுடைய பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளாக உயர் வகுப்பினரையே இன்னமும் வைத்திருக்கிறது. எனவே, மக்களை அணுகுவதில் அவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது. இதை முதலில் காங்கிரஸ் தலைமை சீர்செய்ய வேண்டும்” என்கின்றனர்.
குஜராத் அரசுமீது அதிருப்தி இருந்தாலும், அதை அறுவடை செய்யும் இடத்தில் காங்கிரஸ் இல்லை. குறிப்பாக, இளைஞர்களை ஈர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியிடம் எந்தவித முயற்சியோ, திட்டமோ இல்லை. எனவே, ‘களயதார்த்தத்துக்குச் சம்பந்தமில்லாமல் காங்கிரஸ் கட்சி இருக்கிறது’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த யதார்த்த நிலையை, குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தியும் வெளிப்படுத்தினார். “நம்முடைய பந்தயக் குதிரைகளை, திருமண விழாக்களில் நடனமாடுவதற்கு விட்டு விட்டோம். அதே குதிரைகளைத் தேர்தல் பந்தயத்திலும் இறக்கி விடுகிறோம். இனி, திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடும் குதிரைகளைத் தேர்தல் பந்தயத்தில் இறக்குவதை நிறுத்தப் போகிறோம்” என்று கூறியிருக்கிறார். அதாவது, ‘கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எந்தவித சமரசமும் இல்லாமல் பாடுபடுபவர்களுக்கு மட்டுமே இனி கட்சியில் பொறுப்பு’ என்று அவர் பேசியிருக்கிறார்.
2022 சட்டமன்றத் தோல்வியைத் தொடர்ந்து, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டார். அதேபோல, இப்போதும் கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல அதிரடிகள் அரங்கேறலாம் என்கிறார்கள் காங்கிரஸார்.