ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
ஜம்முவில் முழுமையான அமைதியை கொண்டு வர உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கியது.;
காஷ்மீரில் அமைதி நிலவினாலும், ஜம்முவில் இன்னும் சில பிரச்னைகள் இருந்து வருகிறது. குறிப்பாக தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடைபெறுகிறது. பிரதமர் மோடி பதவியேற்ற அன்று கூட தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதேபோல் கிழக்கு இந்திய மாநிலங்களில் நக்சலைட்டுகள் தொல்லை இருந்து வருகிறது.
இந்த தீவிரவாத நடவடிக்கைகளை அழித்து ஜம்முவில் முழு அமைதி கொண்டு வரவும், கிழக்கு இந்திய மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் டில்லியில் நடந்தது.
இதில் ஜம்முவிலும், கிழக்கு இந்திய மாநிலங்களிலும் அமைதியை கொண்டு வர தேவையான முழு நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு இந்திய ராணுவத்தின் நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது. ஜம்முவில் காஷ்மீர் போன்ற 'ZERO TERROR PLAN' ஐ செயல்படுத்த பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளன.
ஜம்முவில் தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் இதுவரை 50 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஹந்த்வாராவில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. ரியாசி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஜே & காஷ்மீரில் இதுவரை 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் தீவிரமடையும் பட்சத்தில் தேவைப்பட்டால் எல்லை தாண்டிக்கூட தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.