தேசத்தின் மற்றுமொரு பெருமை டில்லி - துவாரகா விரைவு சாலை

ஆனால் இது அமைத்ததில் பெரும் ஊழல் நடந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் புலம்பி அதன் பெருமையை குலைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.;

Update: 2023-08-26 01:30 GMT

டெல்லி- துவாரகா நான்கு அடுக்கு சாலை.

தேசத்தின் பெருமைக்கு மற்றுமொருக்கு எடுத்துக்காட்டாக டில்லி - துவாரகா விரைவு சாலை திகழ்கிறது.

ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு 18.2 கோடி செலவாகும் என்று திட்டமிட்டதிலிருந்து கிலோமீட்டருக்கு ருபாய் 251 கோடியாக அதிகரித்தது எப்படி என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையக (C.A.G) அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டு கின்றன. யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் பாவம் CAG க்கும் அடிசறுக்கி விட்டது என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்திருக்கவில்லை.

துவாரகா விரைவு சாலை 29 கிலோ மீட்டர் தூரம் என்றாலும், இந்த தூரத்தில் 563 கிலோ மீட்டர் நீளம் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்ற நிதர்சனத்தை மறந்து எடுத்தோம், கவிழ்த்தோம் என அறிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து திருச்சி 320 கிலோ மீட்டர் தூரம் என்றால் 2 வழி சாலை எனில் அமைக்க வேண்டிய சாலையின் நீளம் 640 கிலோ மீட்டர்.

துவாரகா விரைவு சாலையை பொறுத்த வரையில் எட்டு வழி சாலையாக அமைக்கப் படுவதோடு, 3.6 கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்தில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. நான்கு அடுக்குகளை கொண்ட இந்த சாலையில், 2 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கப்பாதை, சுற்றுச்சாலை நெடுஞ்சாலை, சர்விஸ் சாலை,மேம்பாலங்கள், மேம்பாலத்தின் மேல் மேம்பாலங்கள் என பல்வேறு பரிமாணங்களில் இந்த சாலை அமைந்துள்ளது. இந்தியாவில், இந்த நூற்றாண்டின் மிக சிறந்த முழுமையான உயரடுக்கு மேம்பால நெடுஞ்சாலை இந்த துவாரகா நெடுஞ்சாலை திட்டம் என்பதை அறியாமல் ஊழல், ஊழல் என்று அசை போட்டுக் கொண்டிருக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

இந்த நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வரும் போது, இது வரை டில்லியிலிருந்து இந்த நெடுஞ்சாலை வழியில் குறிப்பிட்ட இலக்கிற்கு இரண்டு மணி நேரம் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் 30 நிமிடங்களிலேயே சென்று விட முடியும் என்பதோடு பல கோடி மதிப்புள்ள எரிவாயு சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெடுஞ்சாலையை திட்டமிடும் போது, ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 206.39 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ஒரு கிலோ மீட்டருக்கு 181.94 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதன் மூலம் திட்ட செலவை மதிப்பை விட 12 விழுக்காடு சேமிக்கப்பட்டது.

சாதாரணமாக சாலைகள் அமைப்பது வேறு, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் எனும் பறக்கும் சாலைகள் அமைப்பது என்பது வேறு என்பது கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியா முன்னேறிக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல், எங்கேயாவது ஊழல் நடைபெறாதா என்று அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி ஈரடுக்கு மேம்பால சாலை திட்டமானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம், தமிழக அரசு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையால் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருவதையும், அதற்கான திட்ட செலவு ரூபாய் 5721 கோடி என்பதையும் அறிவார்களா? தமிழக அரசுக்கே தெரியாமல் இந்த செலவு திட்டமிடப்பட்டதா? 20.6 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சொல்லும் கணக்குப்படி ஒரு கிலோ மீட்டருக்கு 18.2 கோடி என்றால், மொத்தமே 374.92 கோடி தானே செலவாகும்? என் 5721 கோடி செலவு என்று கேள்வி எழுப்பவில்லையே ஏன்? இந்த திட்டத்தை வேண்டாம் என்று தி மு க எதிர்க்கிறதா? உயர்மட்ட மேம்பால சாலை என்றால் என்ன என்பதை டில்லி துவாரகா உயர்மட்ட சாலையை பற்றி தெரிந்து கொண்டு பேசுவது சிறப்பு!

சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயரடுக்கு மேம்பால திட்டம் 2010ல் 1815 கோடியில் திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டம். அதே போல் தான் டில்லி துவாரகா திட்டமானது 2006ல் திட்டமிடப்பட்டது. தற்போதைய பாஜக அரசு தான் சிரமேற்கொண்டு இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த முன்வந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது சிறப்பை தரும்.

ஊழல், ஊழல் என்று கூறியவர்கள் இந்த முறையும் ஏமாந்து போவார்கள். மீண்டும், மீண்டும் பாஜக ஆட்சியில் ஊழல் ஏதாவது கண்ணில் சிக்காதா என்பதிலேயே குறியாக இருந்து தங்களின் கட்சி வெற்றி பெற என்ன வழி என்பதை சிந்திக்க மறந்து மீண்டும் மீண்டும் தோல்வியுறுவார்கள் என்பது உறுதி. நன்றி: நாராயணன் திருப்பதி.

Tags:    

Similar News