ஆதார் அட்டை வயது சான்றா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

வயதை தீா்மானிக்கும் ஆவணமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட் தீா்ப்பளித்தது.

Update: 2024-10-26 06:09 GMT

உச்ச நீதிமன்றம் -கோப்பு படம் 

சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் வயதை தீா்மானிக்க ஆதார் அட்டையை ஏற்றுக் கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் இந்த தீா்ப்பை வழங்கியது.

இதுதொடா்பாக வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது, ‘மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கடந்த 2018, டிசம்பா் 20-ஆம் தேதி வெளியிட்ட அலுவலக குறிப்பாணையை சுட்டிக்காட்டி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கை எண் 8-இல், ‘ஒருவரின் அடையாளத்தை கண்டறியவே ஆதார் அட்டை பயன்படுத்தப்படுவதாகவும், அதை பிறந்த தேதிக்கான ஆவணமாக எடுக்கக்கூடாது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் அடிப்படையில் உயிரிழந்தவரின் வயதை கணக்கிட்டுக் கொள்ள மோட்டார் வாகன விபத்து உரிமை கோரல் தீா்ப்பாயம் (எம்ஏசிடி) வழங்கிய தீா்ப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது’ என நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நபருக்கு இழப்பீடாக ரூ.19.35 லட்சத்தை வழங்க எம்ஏசிடி உத்தரவிட்டது. உயிரிழந்தவரின் வயதை தவறாக கணக்கிட்டு எம்ஏசிடி இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறி இழப்பீட்டை ரூ.9.22 லட்சமாக குறைத்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

உயிரிழந்தவரின் ஆதார் அட்டையில் அவரின் வயது 47 என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஐகோர்ட் இந்த தீா்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் அவரின் வயதை 45-ஆகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News