இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு கூடுதல் வரி

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.;

Update: 2024-09-20 02:09 GMT

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் இரா. சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர் சு. முத்து விசுவநாதன், மாநில செயலாளர் வேலு. மந்திராச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை சமையல் எண்ணெய்களுக்கும் 20 சதவீத இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த டிசம்பர் 14, 2022 அன்று கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு வாயிலாக மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கொண்டு செல்லப்பட்டு, மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு கூடுதல் வரி விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு அடுத்து 2023 ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 5 வரை இந்த கோரிக்கையையும் உள்ளடக்கி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டமும், ஆகஸ்ட் 7, 2023 அன்று 22 மாவட்டங்களில் மாபெரும் மனு கொடுக்கும் இயக்கமும், அக்டோபர் 11, 2023 அன்று சென்னையில் மாபெரும் தொடர் காத்திருப் போராட்டமும் நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 13 முதல் 16 வரை மத்திய அரசை பாரத் கோக்கனட் ஆயில் திட்டத்தை அறிமுகப்படுத்த கோரியும், அனைத்து சமையல் எண்ணெய்களின் மீது இறக்குமதி வரியை 50 சதவீதம் வரை உயர்த்த கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடும் பனியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கர்நாடக விவசாயிகள் மற்றும் நட்பு அமைப்புகளின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியும், மத்திய உணவு துறை செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளை, அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தும் வலியுறுத்தப்பட்டது.

அதன் பின்பு கடந்த 07-02-2024 அன்று சென்னையில் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது, 08.02.2024 அன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டமும், 16-02- 2024 முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது.

அதோடு இதே கோரிக்கை வலியுறுத்தி கடந்த மார்ச் 17, 2024 முதல் திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தேனி மாவட்டம் - உத்தமபாளையம், மதுரை மாவட்டம் - சோழவந்தான், விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி ஆகிய இடங்களில் மாபெரும் கோரிக்கை பேரணிகளும் நடைபெற்றது.

இதன் பின்பு தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையத்தில் 10-04-2024 அன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, அந்த போராட்டத்தை ஒட்டி கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவருமான அண்ணாமலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை நேரில் அழைத்து தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்து இருந்தார்.

இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான மத்திய அரசால் நீக்கப்பட்ட 20% வரி மீண்டும் தற்போது விதிக்கப்பட்டிருக்கிறது, அதே சமயம் பாரத் கோகனட் ஆயில் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்ச்சியாக தேங்காய் - நிலக்கடலை - எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக மத்திய - மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துக் போராடிக் கொண்டிருப்பது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு, இந்திய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

எனவே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் நட்பு அமைப்புகளின் தொடர் போராட்டங்களே மத்திய அரசால் குறைக்கப்பட்ட வரியை மீண்டும் விதிக்கப்படுவதற்கு காரணம் என்பதை விவசாயிகளுக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், உழவர் உறவுகளுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து மத்திய அரசு பாரத் கோகனட் ஆயில் திட்டத்தை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிபடி நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு கள் இறக்கி விற்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும், நியாய விலை கடைகளில் இந்தோனேசிய - மலேசிய பாமாயிலுக்கு பதிலாக கடலை எண்ணெய் - தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும், உரித்த தேங்காயை தமிழ்நாடு அரசு கேரளாவை போல கொள்முதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நோக்கி தொடர்ச்சியாக முன்னேறுவோம், வெற்றி நமதே என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags:    

Similar News