திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர் கூட்டம்!
திருப்பதி லட்டு சர்ச்சையாகி உள்ள நிலையில், பக்தர்கள் இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.;
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பிற்கு வழங்கப்படும் நெய்யில் பல்வேறு தேவையில்லாத பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இந்த கொடூரம் குறித்து ஒட்டுமொத்த பக்தர்களும் மனம் கலங்கிப்போய் நிற்கின்றனர். இருப்பினும் அரசியல் சூழ்ச்சிகளையும், பன்னாட்டு சூழ்ச்சிகளையும் எதிர்த்து சாதாரண பக்தர்களால் என்ன செய்து விட முடியும். இதில் தவறு செய்தவர்களை பெருமாள் பார்த்துக் கொள்வார் என தங்களது மனப்பாரத்தை இறைவன் மீது போட்டு விட்டு, வழக்கம் போல் தங்களது பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுவும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் பக்தர்கள் நிரம்பி வழிந்தது. தரிசன வரிசையில் இருந்து நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து இருந்தனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தினமும் காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர். அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தான தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,104 பேர் தரிசனம் செய்தனர். 28,330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. லட்டு பிரசாதத்தில் என்ன கலந்திருந்தாலும், கலப்படம் செய்தவர்களை இறைவன் கவனிப்பார். அந்த பிரசாதம் பெருமாள் கோயிலுக்குள் சென்று பிரசாதமாக வெளிவந்தது அதனால் அதனை நாங்கள் புறக்கணிக்கப்போவதில்லை. லட்டு பிரசாதத்தின் புனிதத்தை பாதுகாக்க பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன. அவர்கள் இந்த சிக்கலை கவனிக்கட்டும். நாங்கள் எந்த சூழலிலும் பெருமாளை மனப்பூர்வமான வழிபடுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என பக்தர்கள் மனம் உருகி கூறினர்.