ரூ.500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14% அதிகரிப்பு!
2022-23ஆம் நிதியாண்டில் ரூ.500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.;
கள்ள ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. தவிர பாக்கிஸ்தான் நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் பல லட்சம் கோடி ரூபாய்கள் கள்ளத்தனமாக அச்சிடப்பட்டு இந்தியாவிற்குள் புழக்கத்தில் விடப்படுகிறது. இந்திய உள்நாட்டில் பலரிடம் கருப்பு பணம் அதிகம் உள்ளது. இதனை எல்லாம் சரி செய்ய பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. இதில் சில சிரமங்கள் இருந்தாலும், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பின்னர் தேசத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்தன. இந்நிலையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள ரூபாய்கள் அதிகரித்து விட்டது. கருப்பு பணம் அதிகரித்து விட்டது என்ற காரணத்தால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுகின்றன. அடுத்த தலைவலி ஐநுாறு ரூபாய் நோட்டில் தொடங்கி உள்ளது. உண்மையில் இது புதிய தலைவலி தான்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் நாட்டில் புழங்கும் கள்ளநோட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த நிதியாண்டில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 79,669 கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23ஆம் நிதியாண்டில் 91,110 கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 14 சதவிகிதம் அதிகமாகும்.
இதே காலகட்டத்தில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் 13,604 கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2022-23இல் 9,806 நோட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை இவ்வளவு என்றால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள மற்றும் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் யாராவது வழங்கும் நோட்டு, நல்ல நோட்டா, கள்ள ரூபாய் நோட்டா என எப்படி கண்டுபிடிப்பது, இந்த சிக்கலுக்கு மத்திய அரசு தெளிவான தீர்வினை தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். சில சுயநலவாதிகளும், நாட்டைப்பற்றி கவலைப்படாதவர்களும் செய்யும் சட்ட விரோத செயல்களால் சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க அரசு இந்த ரூபாய் நோட்டு விஷயத்தில் கடினமான பல முடிவுகளை தெளிவாக செயல்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.