11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு: திணறுகிறது கேரள அரசு

கேரள அரசுப் பணியில் இருந்து மே 31ம் தேதி ஒரே நாளில் மட்டும் 11,801 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

Update: 2023-06-01 17:00 GMT

பைல் படம்.

கேரள அரசின் சுகாதாரம், கல்வி, வருவாய் ஆகிய துறைகளில் இருந்து தான் பெருமளவு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பண பலனாக ரூ.1500 கோடிக்கு மேல் கொடுக்க வேண்டும் என்பதால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தது ரூ.15 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை ஓய்வூதிய பலன் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களாக கொடுக்க வேண்டிய தொகை ரூ.1500 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கேரள அரசால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உரிய பணப் பலன்களை கொடுக்க முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்களுக்கான பண பலன்களை கொடுப்பதற்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், யாருக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்க மாட்டோம் என்றும் கேரள நிதித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இவ்வளவு ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன் கொடுப்பதை விட, இவர்கள் ஓய்வு பெற்றதால் ஏற்படும் காலிப்பணியிடங்கள் காரணமாக அரசு நிர்வாக பணிகளில் ஏற்படும் நெருக்கடியில் இருந்து நிர்வாகத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசர அவசியமும் உள்ளது.

இதற்கேற்ப பணியாளர்களை நியமித்தால், அவர்களுக்கான சம்பளமும் பெரும் சுமையாக அமையும். ஆனாலும் செய்தே ஆக வேண்டும். ஆக பெரும் சிக்கலான நிதிச்சூழலில் தான் கேரள நிதித்துறையும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News