11 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா படம்
ரத்தன் டாடாவின் படத்தை 11 ஆயிரம் வைரங்களால் உருவாக்கி இந்தியாவின் ஒட்டு மொத்த இணையவாசிகளின் இதயங்களை வியாபாரி ஒருவர் வென்றுள்ளார்.
பல ஆயிரம் வைரங்களை பதித்து உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா புகைப்படம் இன்ஸ்டாகிரா மில் வைரலாகி அது பல லட்சம் இணையவாசிகளின் இதயங்களை வென்று சாதனை படைத்து உள்ளது.
ரத்தன் டாடா மறைந்த பி்ன்னரும் அவரை பற்றிய செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் இருந்து அவர் இறந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு வியாபாரியாகவோ, தொழில் அதிபராகவோ இருந்திருந்தால் மக்கள் அவரை இவ்வளவு பெருமைப்படுத்தி இருக்க மாட்டார்கள். மாறாக அவர் பணத்தை மட்டும் சம்பாதிக்காமல் தொழிலில் நேர்மையாகவும், தொழிலாளர்களுக்கு நல்ல முதலாளியாகவும், மனித நேயமிக்கவராகவும் இருந்ததால் தான் அனைத்து தரப்பினராலும் புகழப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேரந்த வைர வியாபாரி ஒருவர் ரத்தன் டாடா மீது பேரன்பு கொண்டவர். ரத்தன் டாடா மறைவுக்கு தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்த நினைத்த அவர், 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இதற்கு, இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வீடியோவை ஓரிரு மணி நேரத்தில் 6 லட்சம் பேர் லைக் செய்ததுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ரத்தன் டாடா என்ற தன்னிகரில்லா தலைவரை பெருமைப்படுத்த இந்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வேறு சிலர் ரத்தன் டாடாதான் உண்மையான வைரம் என்று கூறி அவரை பெருமைப் படுத்தியுள்ளனர்.