மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் அகில இந்திய மாநில நீதித்துறை அகாடமியின் இயக்குநர்களுக்கான ஓய்விடத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் முக்கிய நோக்கமல்ல, நீதியை நிலை நாட்டுவதும் அவசியம் என்றும் உரிய காலத்தில் நீதி வழங்குவதன் மூலம் இதனை செயல்படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த குடியரசுத் தலைவர், நாடு முழுவதும் சுமார் 18,000 நீதிமன்றங்கள் கணினி மயமாக்கப்பட்டிருப்பதாகவும், 2021 ஜனவரி மாதம் வரை பொதுமுடக்கக் காலத்திலும் சுமார் 76 லட்சம் வழக்குகள் காணொலி நீதிமன்றங்கள் வாயிலாக விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் நீதித்துறையில் கீழமை நீதிமன்றங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், சட்ட மாணவர்களை தலைசிறந்த நீதிபதிகளாக மாற்றும் முயற்சியில் அவர்களுக்கு நீதித்துறை சிறப்பான பயிற்சிகளை வழங்குவதாகவும், அதேபோல் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக நீதிபதிகள் உள்ளிட்ட இதர நீதித்துறை சார்ந்த பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.