உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. இதில் ஜனாதிபதி பேசும் போது, இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும். நாடு முழுவதும் புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வெள்ளம், நிலநடுக்கம் என பல பேரிடர்களை நாம் ஒருங்கே எதிர்கொண்டு வருகிறோம்.
கொரோனா காலத்தில் இந்தியர்களுக்கு என்று இல்லாமல் உலக மக்களின் நலனுக்காக இந்தியா பணியாற்றியது. சுயசார்பு முழக்கம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா பொதுமுடக்கம் நமக்கு உணர்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. கொரோனா காலத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களை காப்பாற்றியுள்ளன. சுய சார்புடன் இருப்பது தான் தற்போதைய இந்தியாவின் தாரக மந்திரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.