'மனசே...மனசே' தன்னம்பிக்கை தொடர்- I முயற்சிக்கு எல்லையே இல்லை..வானம் வசப்படும்..!

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் இடைவிடாத முயற்சி அவசியம் தேவை. முயற்சி இல்லாதவர்களுடைய வாழ்க்கையானது கூரையில்லாத வீட்டைப்போன்றது. முயற்சிக்கு எல்லையே இல்லை..முயன்றால் வானம் கூட நம் வசப்படும்.

Update: 2022-07-14 01:15 GMT

தன்னம்பிக்கை. (மாதிரி படம்)

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்... முயற்சியே முன்னேற்றத்தை தரும் என்ற சொற்றொடருக்கு ஏற்ப நம் வாழ்க்கையில் எந்தவொரு செயலுக்கும்  தன்னம்பிக்கையும், முயற்சியும் தான் அ டிப்படை காரணிகளாக திகழ்கிறது. அந்த வகையில்  நம்பிக்கை பிரதான இடத்தினை பெறுகிறது. நம்பிக்கை இருப்பவர்களிடத்தில் நிச்சயம் முயற்சியானது இருக்கும்.சரியாக முயற்சி செய்யப்படுபவர்களுக்கு அந்த வானமே  வசப்படும். அதாவது அந்த அளவுக்கு வாழ்க்கையின் உயரத்தினை  நிச்சயம் தொடுவார்கள் இதில் எந்தவித மாற்று கருத்துமே இல்லை. சரிங்க... நானும் முயற்சி செய்கிறேன்  ஆனால்  ரிசல்ட் மட்டும் வரலைங்க.. என்று சொல்பவர்கள் காது கொடுத்து கேளுங்கள். 


திட்டமிடல் 

வெறும் முயற்சி மட்டுமே  வாழ்க்கையில் வெற்றியை தந்து விடாது. அந்த முயற்சிக்கு முன் திட்டமிடல்  அவசியம். திட்டமிடப்பட்டு செய்யக்கூடிய  செயல்களே வெற்றியை தரும். திட்டமிடாத செயல்கள்  வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அந்த வகையில் நாம்  செய்யும் செயலுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிட வேண்டும். முடிந்தால் ஒரு டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்களுடைய பள்ளி , கல்லுாரி , அல்லது போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்  மாணவ, மாணவிகள்  ஒரு நாளின் இருபத்து நான்கு  மணி நேரத்தில்  நாம் என்ன என்ன செய்ய போகிறோம். பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் நேரம் தவிர இருக்கும் நேரத்தினை எவ்வாறு செலவிடுவது? எந்தெந்த நேரத்தில் எந்த பாடத்தினை படிப்பது? உள்ளிட்டவைகளை உங்கள் மனதில்  திட்டமிட்டு கொண்டால்  வெற்றி உங்கள் பக்கம்தான். 

மனசு வைக்கணும் 

இறைவனின் படைப்பில் நாம் எல்லோரும் ஒரே விதமாகதான் பிறக்கிறோம். ஆனால் காலப்போக்கில் வாழும்  பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக அவரவர்களின் வாழ்க்கை தரமானது நிர்ணயிக்கப்படுகிறது. இன்று வாழ்க்கையில் ஜெயித்தவர்களிடம் சென்று கேட்டு பாருங்கள். கஷ்டப்படாமல்  உழைக்காமல்  முயற்சிக்காமல்  அவர்கள் இந்த நிலையினை நிச்சயம் அடைந்திருக்க மாட்டார்கள். வசதி படைத்தவர்கள் என்றாலும்  முயற்சி, உழைப்பு , நம்பிக்கை எனும் மூன்று தாரக மந்திரம் இல்லாவிட்டால்  அவர்களால் ஜெயித்திருக்க முடியாது. இம்மூன்று தாரக மந்திரத்தினை யார் முறையாக கடைப்பிடிக்க மனசு வைக்கிறார்களோ  அவர்களின்  வீட்டு வாசலில்தான் வெற்றி கனி காத்திருக்கும்.


டைம் மேனேஜ்மென்ட்

வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா  நேரத்தினை உரிய முறையில் செலவிடுதல் அவசியம் தேவை.  இக்காலத்தில்  இளைய சமுதாயமே ஸ்மார்ட் போன் எனும் கருவிக்கு அடிமைப்பட்டுள்ளது. எந்தவொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பிலும் நிச்சயமாக சாதக , பாதக அம்சங்கள் உண்டு. இதில் நாம் நமக்கு தேவையான சாதக அம்சத்தினை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் போனில் செலவிடுவதால் உங்கள் நேரத்தினை அது இயற்கையாகவே விழுங்கிவிடுகிறது. இன்று உலகமே கையடக்கத்துக்குள் வந்துவிட்டாலும்  பலருக்கு நேரத்தினை  எப்படி செலவிடுவது என்பது தெரியவில்லை. அந்த வகையில்  காலமும் நேரமும் யாருக்காகவும் எப்போதும் காத்திருப்பதில்லை. எனவே நாம் உரிய முறையில் திட்டமிட்டு  நேரத்தினை செலவிட்டால் எதிர்காலம் பிரகாசிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. திட்டமிடுவோம்..வெற்றிபெறுவோம்.

(இன்னும் வளரும்..) 

Tags:    

Similar News