சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராஜா மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. எம்.பி. ஆ.ராஜா மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-11 15:04 GMT

ஆ,ராஜா

 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா உள்பட பலர் மீது வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2ஜி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட  குற்றப்பத்திரிகையில் உண்மை தன்மையில்லை, சாட்சியங்கள் கோர்ட்டில் சரியான முறையில்  முன்னிறுத்தப்படவில்லை என்றும் அதனால் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும்  நீதிபதி தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த தீர்ப்புக்கு எதிராகடெல்லி ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்றும்  தினசரி விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்  சிபிஐ தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் வேகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆ.ராஜா மீது சொத்துகுவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. 

 முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டுகளில்  வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய்  சொத்து குவித்ததாக  சிபிஐ ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து இருந்தது.  கடந்த 2015ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் ஆ.ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும்  சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி  ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. அந்த ஆவணங்களின்  அடிப்படையில் இத்தனை நாட்களாக  வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது ஆ. ராசாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராஜா உள்பட ஆறு பேருக்கு எதிராக சி.பி.ஐ. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருக்கிறது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தி.மு.க. மூத்த நிர்வாகியான ஆ.ராஜா பொதுக்கூட்டங்களில் பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி பேசிவந்தார். தி.மு.க. பொதுக்குழு சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அதில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பா.ஜ.க.வை விமர்சித்து பேசினார். இந்த சூழ்நிலையில் தான் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News