பொள்ளாச்சி அருகே கந்து வட்டி கொடுமைக்கு காரணமான தி.மு.க. பிரமுகர் கைது

பொள்ளாச்சி அருகே கந்து வட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-10 06:34 GMT

கைது செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர் கிருஷ்ண குமார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தினசரி கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதராஜ் பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கிருஷ்ண குமார் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார்.

பின்னர் கிருஷ்ணகுமார் கந்துவட்டி என்ற பெயரில் வரதராஜிடம் அதிக வட்டி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வட்டியை முறையாக கொடுக்கவில்லை என கிருஷ்ணகுமார், வரதராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனம் உடைந்த வரதராஜ் தான் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டது குறித்து கடிதம் மூலம் எழுதி  வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை காவல் நிலைய காவல் துறையினர் வரதராஜ் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இதில் கந்து கொடுமையால் வரதராஜ் தற்கொலை செய்து கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தி.மு.க. பிரமுகர் கிருஷ்ணகுமார் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவமும், அதற்கு காரணமாக இருந்த திமுக பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News